ஸ்பெயினின் உலகக்கோப்பை ஆயுதம் | சிறுவர்களை சாம்பியனாக்கிய கிளப்.. மெஸ்ஸி உருவானதும் இங்குதான்!
ஃபிபா 2026 உலகக்கோப்பையை ஸ்பெயின் அணி வென்ற நிலையில், இந்த உலகக்கோப்பையில் அந்த அணியின் ஆதிக்கம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகப்புகழ் பெற்ற நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமலும், ஓர் அணியாக ஸ்பெயினின் ஆதிக்கம் ரொனால்டோ, எம்பாப்பே, மெஸ்ஸி ஆகிய ஜாம்பவான்களையே மைதானத்தில் முழுவதுமாக கட்டிப்போட்டது.
ஆனால், ஸ்பெயின் அணியின் இந்த வெற்றியின் பின்னால் ஒரு கிளப் இருக்கிறது என்பது கால்பந்தைக் கூர்ந்து கவனிப்பவர்களைத் தாண்டி பலருக்கு ஆச்சரியமான ஒரு தகவல்தான். ஸ்பெயினின் இரண்டு புகழ்பெற்ற கிளப்கள் என்றால், அது ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா ஆகிய நூற்றாண்டு பழைமைவாய்ந்த கிளப்கள்தான்.
இதில் ரியல் மாட்ரிட் அணியில் உலகப் புகழ்பெற்ற எம்பாப்பே (Mbappe), பெல்லிங்காம் (Bellingham), வினிசியஸ் ஜூனியர் (Vinicius Junior) ஆகிய வீரர்கள் ஆடி வருகின்றனர். உலகிலேயே மிகவும் பணக்கார கிளப்பான ரியல் மாட்ரிட் பல்வேறு அணிகளில் ஆடிய நட்சத்திரங்களை தங்கள் அணிக்கு வாங்கி மாபெரும் கிளப்பாக உருவெடுத்துள்ளது.
அதேநேரம், ரியல் மாட்ரிட் அணிக்கு இணையாக பணபலம் இல்லாவிட்டாலும் ’லா மாசியா’ (La Masia) என அழைக்கப்படும் தனது இளையோர் கால்பந்து அமைப்பு மூலம் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களை பார்சிலோனா கிளப் உருவாக்கி வருகிறது.
மெஸ்ஸி (Messi), இனியெஸ்டா (Iniesta), சாவி (Xavi), புஸ்க்வெட்ஸ் (Sergio Busquet), பீகே (Pique) ஆகிய ஜாம்பவான்கள் பார்சிலோனாவின் இந்த லா மாசியாவில் உருவானவர்களே. அதேபோல, தற்போதும் கால்பந்தின் எதிர்கால நட்சத்திரங்களான (Lamin yamal), குபார்சி (Pau Cubarsi ), பெட்ரி (Pedri ), குக்குரியா (Marc Cucurella) ஆகியோரும் இந்த லா மாசியாவில் உருவானவர்களே.
பிற கால்பந்து கிளப்கள் பயிற்சியாளர்களுக்கு ஏற்ப தங்கள் ஆட்ட முறையை மாற்றும் நிலையில், பார்சிலோனா கிளப் லா மாசியாவில் இருந்து தங்கள் சீனியர் அணிவரை, பந்தை மிக வேகமாக ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பாஸ் செய்து கோல் அடிக்கும் முறையான டிக்கி டாகா ((Tiki-Taka) முறையையே பின்பற்றுகிறது. இதனால் சிறுவர் பிரிவில் சிறப்பாக ஆடும் வீரர்கள்கூட சீனியர் அணிக்கு வரும்போது அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாகவே எம்பாப்பே (Mbappe), பெல்லிங்காம் (Bellingham), வினிசியஸ் ஜூனியர் (Vinicius Junior) ஆகிய நட்சத்திர வீரர்களைக் கொண்ட ரியல் மாட்ரிட் அணியை 20 வயதுகூட ஆகாத லமின் யமால் (Lamin yamal), குபார்சி (Pau Cubarsi ) போன்ற சிறுவர்களை வைத்து பார்சிலோனா வீழ்த்தி மாபெரும் சாதனையைப் படைத்தது.
இப்படி பார்சிலோனா அணியில் ஆடும் மற்றும் லா மாசியாவில் ஆடிய 9 வீரர்கள் தற்போதைய ஸ்பெயின் அணியில் இடம்பிடித்திருந்தனர். அவர்கள் தங்கள் கிளப்பில் இருந்தே ஒரே முறையில் ஆடியதால் தேசிய அணியிலும் டிக்கி டாகா முறையில் ஆடி உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ஸ்பெயின் அணி நீண்டகாலமாகவே டிக்கி டாகா முறையில் ஆடி வருவதால், ஸ்பெயின் அணியில் ஆடும் பிற கிளப் வீரர்களும் இந்த முறைக்கு எளிதில் பழகியியுள்ளனர். இதனால் அவர்கள் ஒருங்கிணைத்து ஆடும்போது அவர்களை எந்த அணியாலும் தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே ஸ்பெயின் அணியின் மாபெரும் ஆயுதமாகவும் உருவெடுத்துள்ளது. ஸ்பெயின் அணி கடந்த 2010-ம் ஆண்டு முதல்முறை சாம்பியன் பட்டம் வென்றபோதும் அந்த அணியில் 9 பார்சிலோனா கிளப் வீரர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் புதிய தலைமுறையில் ’புதிய தொடர்கள்’!
உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் எழுதும் மனதைக் கவரும் தொடர்கள், விரைவில் நமது ’புதிய தலைமுறை’யில் இணையதளத்தில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில், திங்கள்தோறும் பி.கே.பழனிக்குமார் எழுதும் ’ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு’ம், புதன்தோறும் டாக்டர் வி.அமுதன் எழுதும் ’சக்கரங்கள் சொல்லும் கதை’யும், வெள்ளிதோறும் சுகுணா திவாகர் எழுதும் ’நிறம் மாறும் சினிமா’ ஆகிய தொடரும் இடம்பெற இருக்கிறது.

