சுக்பீா் சிங் பாதல் எக்ஸ் தளம்
இந்தியா

பஞ்சாப் | பொற்கோயிலில் சேவகர் பணி.. மதரீதியான தண்டனையை ஏற்ற முன்னாள் துணை முதல்வர்! நடந்தது என்ன?

சீக்கியர்களின் நம்பிக்கைபடி, தவறு செய்தவர்களுக்கு மதரீதியாக வழங்கப்படும் தண்டனை சுக்பீர் சிங் பாதலுக்கு நேற்று (டிச.2) பிறப்பிக்கப்பட்டது.

Prakash J

கடந்த 2007 முதல் 2017 வரை சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) ஆட்சியில் இருந்தது. அப்போதைய காலக்கட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுக்பீா் சிங் பாதல் துணை முதல்வராக இருந்தார். அந்தச் சமயத்தில் சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மத நிந்தனை வழக்கில் மன்னிப்பு வழங்கப்பட்டது, அவர் தண்டிக்கப்படாதது உள்ளிட்ட குற்றங்கள் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு, அது குறித்து சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் விசாரணை நடத்தியது.

இதில், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல் மற்றும் அப்போதைய அமைச்சர்கள், சிரோமணி அகாலி தள் கட்சித் தலைவர்கள் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுக்பீர் சிங் பாதல் மன்னிப்பும் கோரியிருந்தார். இதற்கிடையே, அவர் தன்னுடைய கட்சித் தலைவர் பதவியையும் அண்மையில் ராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில்தான், சீக்கியர்களின் நம்பிக்கைபடி, தவறு செய்தவர்களுக்கு மதரீதியாக வழங்கப்படும் தண்டனை சுக்பீர் சிங் பாதலுக்கு நேற்று (டிச.2) பிறப்பிக்கப்பட்டது. சீக்கியா்களின் அதிகாரபீடமான அகால் தக்த், வழங்கிய தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்படி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சேவகராக காலணிகளையும், பாத்திரங்களையும் சுக்பீா் சிங் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், முன்னாள் முதல்வரும் சுக்பீா் சிங் பாதலின் தந்தையுமான பிரகாஷ் சிங் பாதல் மறைந்துவிட்டதை அடுத்து, அவருக்கு முன்பு வழங்கப்பட்ட சீக்கிய சமுதாயத்தின் பெருமை எனும் பட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, தனது தவறுகளுக்கு வருந்துவதாக எழுதப்பட்ட பொற்கோயிலுக்கு வந்த சுக்பீர் சிங், தண்டனையை ஏற்று சேவகராகப் பணியாற்றினார். காலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், சக்கர நாற்காலியில் வந்திருந்தார்.