சீக்கிய கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்பு: மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் மாடல்

சீக்கிய கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்பு: மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் மாடல்
சீக்கிய கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்பு: மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் மாடல்

பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு மாடல் பெண் ஒருவர், வெறும் தலையுடன் கூடிய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது சீக்கிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதன்பின்னர் சௌலேஹா என்ற அந்த மாடல் பெண் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை நீக்கிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மன்னத் க்ளாத்திங் என்ற பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்தார்பூர் குருத்வாராவில் எடுக்கப்பட்ட மாடல் செளலேஹாவின் படங்களை நேற்று (29.11.2021) பதிவிடப்பட்டது.  இதற்கு கண்டனம் தெரிவித்த சிரோமணி அகாலி தளத்தின் செய்தித் தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “ஸ்ரீ குருநானக் தேவ் ஜியின் புனிதமான இடத்தில் இத்தகைய நடத்தையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தானில் உள்ள அந்த மாடலின் மத ஸ்தலத்தில் இதை செய்ய தைரியம் உள்ளதா?என கேள்வியெழுப்பினார்.

குருத்வாராவிற்கு செல்பவர்கள் அனைவரும் தலையை மூடுவது கட்டாயம் என்பதுடன், புனிதமான அந்த இடத்திற்கு  செய்யப்படும் மரியாதையாக கடைபிடிக்கப்படுகிறது.

கடும் கண்டனங்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டுள்ள சௌலேஹா, "சமீபத்தில் நான் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை வெளியிட்டேன். வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும், சீக்கிய சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் நான் கர்தார்பூருக்குச் சென்றேன். அது யாருடைய மனதையோ அல்லது எதையும் புண்படுத்துவதற்காகவோ செய்யப்படவில்லை. இருப்பினும், நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அல்லது அங்குள்ள கலாச்சாரத்தை நான் மதிக்கவில்லை என்று அவர்கள் நினைத்தால், மன்னிக்கவும்"என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். போட்டோஷூட்டுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, அந்த மாடல் சீக்கிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். "கர்தார்பூர் சாஹிப் ஒரு மத சின்னம், அது திரைப்பட செட் அல்ல" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com