அன்பால் இணையும் இரு உள்ளங்களுக்கு இவ்வுலகில் எப்போதுமே எதிர்ப்பு எழுந்துகொண்டுதான் இருக்கிறது. ஆம், காதல் திருமணம் செய்துகொள்ளும் காதலர்கள் எல்லோரையும் இந்த உலகும் அவர்களது உறவினர்களும் அவ்வளவு சர்வசாதாரணமாக ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியே ஏற்றுக்கொண்டாலும், அவர்களுக்குப் பின்னாளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறியபடியேதான் உள்ளன. அந்த வகையில், பஞ்சாப்பில் உள்ள கிராம் ஒன்று பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் காதல் திருமணம் செய்யும் காதலர்களுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ளது மனாக்பூர் ஷரீஃப் என்ற கிராமம். இது, சண்டிகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்தில் சுமார் 2,000 மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், தனது உறவுக்காரப் பெண்ணான 24 வயது இளம்பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தக் காதல் திருமணம் இரு குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, மனக்கசப்புகள், குடும்பத் தகராறுகள் என கிராமத்தின் அமைதி குலைந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனிமேல் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்பவர்கள் கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறுபவர்களுக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்றும், மீறி அடைக்கலம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து கடந்த ஜூலை 31ஆம் தேதி ஊர் மக்கள் சார்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமத் தலைவர் தல்வீர் சிங் இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில், "இது ஒரு தண்டனை அல்ல, ஆனால் நமது மரபுகள் மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை. நாங்கள் காதல் திருமணத்தையோ அல்லது சட்டத்தையோ எதிர்க்கவில்லை. ஆனால் எங்கள் பஞ்சாயத்தில் அதை நாங்கள் அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தத் தீர்மானம் பஞ்சாயத்து சட்டத்திற்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். "இது தலிபான் உத்தரவு" எனச் சொல்லும் பாட்டியாலாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. தரம்வீர காந்தி, "ஒருவரின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஒவ்வொரு வயது வந்தவரின் அடிப்படை உரிமையாகும். அரசு தலையிட்டு அத்தகைய தம்பதிகளை தெளிவற்ற மனப்பான்மையிலிருந்து பாதுகாக்க வேண்டும்” என இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்துள்ள அதிகாரிகளான மொஹாலியின் கூடுதல் துணை ஆணையர் (கிராமப்புறம்) சோனம் சவுத்ரி, ”இதுவரை எந்த முறையான புகாரும் பதிவு செய்யப்படவில்லை. தனிநபர்கள் வயது வந்தவர்களாக இருந்தால், அவர்கள் விரும்பும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள சட்டப்பூர்வமாக சுதந்திரமாக உள்ளனர். எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு புகார்களும் சட்டத்தின்படி தீர்க்கப்படும்” எனவும், மொஹாலி காவல்துறை கண்காணிப்பாளர் மோஹித் அகர்வால், "இது ஒரு வாழைப்பழக் குடியரசு அல்ல. நாங்கள் சட்டத்தையும் அரசியலமைப்பு உரிமைகளையும் நிலைநிறுத்துவோம்.
இதுவரை, எந்த அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை. அப்படி வந்தால், நாங்கள் சட்டத்தின்படி செயல்படுவோம். யாருக்கும் விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை" எனவும், பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ராஜ் லல்லி கில், ”இந்தத் தீர்மானம் அரசியலமைப்பிற்கு விரோதமானது. அத்தகைய பஞ்சாயத்தின் முடிவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் இதைப் பார்ப்போம். இதற்கு எதிராக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை" எனவும் அதில் தெரிவித்துள்ளனர்.