ஒடிசா | சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி.. கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம்!
இந்தியர்கள் விண்ணிற்குச் சென்று ஆய்வு செய்து வரும் இக்காலத்திலும், நாட்டின் பல பகுதிகளில் சாதி, மத ரீதியாக அரங்கேற்றப்படும் விரும்பத்தகா நிகழ்வுகள் வேதனையைத் தருகின்றன. காதல் திருமணம் செய்த இளம் ஜோடியை சிலர் காளைகளைப்போல கலப்பையில் கட்டி வைத்து வயலை உழ வைத்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்திருக்கிறது.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள கஞ்சமாஜிரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த இளைஞனும் இளம்பெண்ணும். இவர்கள் இருவரும் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், அந்த நபர் அந்தப் பெண்ணின் தந்தைவழி அத்தையின் மகன் என்பதால் சில கிராமவாசிகள் அவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளூர் பழக்கவழக்கங்களின்படி இதுபோன்ற திருமணம் தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இப்படி, தங்கள் சமூக வழக்கப்படி பொருந்தா உறவு முறையில் திருமணம் செய்துள்ளதாகக் கூறி கலப்பையில் பூட்டி உழச்செய்ததோடு, பிரம்பால் தாக்கவும் செய்துள்ளனர். பின்னர், கோவிலுக்கு அழைத்துச் சென்று பரிகார பூஜை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இளம் தம்பதி கலப்பையில் பூட்டப்படும் காணொளி வெளியான நிலையில், பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, இத்தகைய பழமைவாத நடவடிக்கைகளை களைய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, ஜனவரி மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ராயகடா மாவட்டத்தில் வசிக்கும் பெண் வேறு சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டநிலையில், பாவம் சுத்திகரிப்பு என்ற பெயரில் சடங்கை செய்து அப்பெண்ணின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்துள்ளனர்.