ஜக்ஜித் சிங் தலேவால், உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம்
இந்தியா

விவசாய சங்கத் தலைவர் தல்லேவால் தொடர் உண்ணாவிரதம்.. விசாரணையில் உச்சநீதிமன்றம் முக்கிய கருத்து!

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவரும் பஞ்சாப் விவசாயச் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பஞ்சாப் அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது.

Prakash J

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி - ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். எனினும் அவர்கள் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப் – ஹரியானா எல்லையான கனவுரியில் பஞ்சாப் விவசாயச் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் (வயது 70) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். அவரது உடல்நிலை மோசமடைந்தபோதிலும் சிகிச்சைக்கு மறுத்து போராட்டத்தை தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றம்

இதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உண்ணாவிரதம் இருக்கும் தலேவாலின் உடல்நிலையை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், ”பஞ்சாப் அரசாங்கம் தாமதமின்றி மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும்; அங்கு அவர் மருத்துவ உதவி பெறும் போராட்டத்தைத் தொடரலாம்” என உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நீங்கள் ஏன் பின்பற்றவில்லை அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பி ஒத்திவைத்தனர். மேலும் அதுகுறித்து அறிக்கையை பஞ்சாப் அரசு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கு இன்று (ஜன.2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜக்ஜித் சிங் தல்லேவால் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக பஞ்சாப் அரசை உச்ச நீதிமன்றம் மீண்டும் கடுமையாகச் சாடியது. அரசின் அணுகுமுறை நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் தலேவாலை உண்ணாவிரதத்தைக் கைவிட நீதிமன்றம் வற்புறுத்த முயற்சிப்பதாக தவறான கருத்தை பரப்புவதாகவும் தெரிவித்தது.

ஜக்ஜித் சிங் தலேவால்

மேலும் நீதிபதிகள், “அவரது உண்ணாவிரதத்தை முறிக்கக் கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ளட்டும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அமைதியான போராட்டத்தை தொடரலாம் என்று மட்டுமே கூறினோம். இந்தக் கோணத்தில் அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டும்.

மருத்துவமனைக்கு மாற்றினால் அவர் உண்ணாவிரதத்தை தொடரமாட்டார் என்று அர்த்தமில்லை. அவரது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மருத்துவ வசதிகள் உள்ளன. அது மட்டுமே எங்களின் கவலை. ஒரு விவசாயத் தலைவரான அவரது போராட்டம் விலைமதிப்பற்றது. அவர் எந்த அரசியல் சித்தாந்தங்களுடனும் இணைந்திருக்கவில்லை, அவர் விவசாயிகளின் பிரச்னையை மட்டுமே கவனித்து வருகிறார்” எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுதொடர்பாக சில விவசாயச் சங்கத் தலைவர்கள் வெளியிட்ட பொறுப்பற்ற அறிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்தது. “பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுபவர்களும் இருக்கிறார்கள். விவசாயிகளின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் பொறுப்பற்ற அறிக்கைகளை சொல்லி சிக்கலாக்கி வருகின்றனர். அவர்களின் நேர்மையான நம்பிக்கைகள் என்ன என்பது குறித்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்" எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தால் மட்டுமே மருத்துவ உதவியை ஏற்றுக்கொள்வேன் என ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்ததாக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசுத் தரப்பில், ”உங்கள் உத்தரவின்படி, மருத்துவ உதவியை எடுக்கும்படி அவரை சமாதானப்படுத்த முயற்சித்தோம். ஆனால், அவரோ சில தலையீடுகளுக்கு உட்பட்டு மருத்துவ உதவியை நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன் என உறுதியான கருத்துடன் இருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஜக்ஜித் சிங் தலேவால் உடல்நல பிரச்னையைத் தீர்ப்பதற்கு பஞ்சாப் அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் கருத்தை நீதிமன்றம் நம்பவில்லை. அதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ஒருமுறைகூட உங்கள் அதிகாரிகள் அங்குச் சென்றதில்லை. ஆனால், உங்கள் அமைச்சர்கள் அங்குச் சென்றிருக்கிறார்கள். தயவுசெய்து எங்களைப் பல விஷயங்களைச் சொல்ல வற்புறுத்தாதீர்கள்" என்றனர். மேலும், "இந்த நோக்கத்திற்காக நாங்கள் ஒரு குழுவை அமைத்துள்ளோம். அதுகுறித்து அரசு விவசாயிகளுக்கு தெரிவித்ததா?” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அரசு, “தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்தக் குழு விவசாயிகளை நாளை (ஜன.3) விவாதத்திற்கு அழைத்துள்ளது. அரசு சமரசம் மூலம் தீர்வு காண முயல வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ”ஜக்ஜித் சிங் தலேவால் உடல்நிலையை கவனித்துக்கொண்டால், மருத்துவ உதவியுடன் அவர் உண்ணாவிரதத்தைத் தொடர முடியும். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று நாங்கள் திருப்தி அடைந்தால் குழுவுக்கும் பிரச்னை எளிதாகிவிடும். இதில் மாநில அரசு உத்தரவுகளை நிறைவேற்றத் தவறினால், மத்திய அரசு தலையிடக் கூடும்” என எச்சரித்தனர்.