பகவந்த் மான் எக்ஸ் தளம்
இந்தியா

”'ஒரு நாடு.. ஒரு கணவர்' திட்டமா?” - பாஜகவின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த பகவந்த் மான்!

’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வைத்து பாஜக வாக்குகள் கேட்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டியுள்ளார்.

Prakash J

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் 26 பேர் பலியாகினர். இதற்கு, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி அளித்தது. இதனால், இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் வாய்ப்பு உருவானது. இரு நாடுகளும் கடுமையாகத் தாக்கிக் கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாக்குதல் முடிவுக்கு வந்தது.

எனினும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயர் பேசுபொருளானது. பஹல்காம் தாக்குதலில் கணவர்களை கொன்று பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களை பழி தீர்க்கவே ’ஆபரேஷன் சிந்தூர்’ (operation sindoor) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்தப் பெயரை பிரதமர் மோடி சூட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. சிந்தூர் என்பது குங்குமம் எனப் பொருள்படுகிறது. அப்படியான குங்குமத்தை, திருமணமான பெண்கள் நெற்றியின் உச்சியில் வைப்பர். அந்தக் குங்குமத்தைப் பயங்கரவாதிகள் அழித்ததாலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

ஆபரேஷன் சிந்தூர்

மேலும், ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வெற்றியை வெளிப்படுத்த பாஜக சமீபத்தில் ஒரு நாடு தழுவிய பிரசாரத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரசாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஒவ்வொரு வீட்டிற்கும் 'சிந்தூர்' அனுப்பும் என்று சில தகவல்கள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வைத்து பாஜக வாக்குகள் கேட்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், “ ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாஜக வாக்குகள் சேகரிக்கிறது. அவர்கள், 'சிந்தூர்' என்பதை நகைச்சுவையாக மாற்றிவிட்டனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் (குங்குமம்) அனுப்புகிறார்கள். இப்போது என்ன மோடியின் பெயரில் 'சிந்தூர்' பயன்படுத்தப் போகிறீர்களா? இது என்ன 'ஒரு நாடு, ஒரு கணவர்' திட்டமா” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

bhagwant mann

முன்னதாக, இந்த விவகாரத்தில் பாஜகவை விமர்சித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, " ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் அவர்களின் சிந்தனையில் உருவானது. இதில் அரசியல் நோக்கம் இருக்கிறது. பல கட்சிப் பிரதிநிதிகள் பல நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கும் சமயத்தில்,​ நான் இதைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், மேற்கு வங்கத்திற்கு அரசியல் பிரசார நோக்கத்துடன் பிரதமர் வந்துள்ளார். முதலில், அவர் தன்னை டீ விற்பனையாளர் என்று கூறிக்கொண்டார். பின்னர், தன்னை ஒரு காவலாளி என்று கூறிக்கொண்டார். இப்போது, அவர் சிந்தூர் விற்க இங்கு வந்துள்ளார்" என்றார்.