OPERATION SINDOOR | லோகோவை உருவாக்கியது யார்? தகவலை வெளியிட்ட இந்திய ராணுவம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிக்ள் 26 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த அனைவரும் ஆண்களே. இந்த பஹல்காம் தாக்குலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கி இருந்தனர்.
பஹல்காம் தாக்குதலில் கணவர்களை கொன்று பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களை பழி தீர்க்கவே ’ஆபரேஷன் சிந்தூர்’ (operation sindoor) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்தப் பெயரை பிரதமர் மோடி சூட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. சிந்தூர் என்பது குங்குமம் எனப் பொருள்படுகிறது. அப்படியான குங்குமத்தை, திருமணமான பெண்கள் நெற்றியின் உச்சியில் வைப்பர். அந்தக் குங்குமத்தைப் பயங்கரவாதிகள் அழித்ததாலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
தவிர, sindoor என்ற லோகோவில் உள்ள முதல் O எழுத்தில் குங்குமம் நிறைந்த கிண்ணம் வைக்கப்பட்டிருக்கும். அடுத்த Oவில் அந்த குங்குமம் சிதறிக் கிடக்கும். இந்த லோகோவும், இந்தப் பெயரும் தற்போது இந்தியாவின் துல்லியமான தாக்குதலின் அடையாளமாக மாறியுள்ளது. மேலும் இந்த சின்னம், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியை பிரதிபலிக்கிறது.
இந்தப் பெயரும் லோகோவும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயத்தைத் தொட்டுள்ளன; அதை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இந்த நிலையில், இச்சின்னமாக இருக்கும் இந்த படம் கூடுதல் தொடர்பு இயக்குநரகத்தின் சமூக ஊடகப் பிரிவால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 'ஆபரேஷன் சிந்தூர்' லோகோவை வடிவமைத்தது லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.