கடந்த 2012ஆம் ஆண்டு, தலைநகர் புதுடெல்லியில் ஓடும் பேருந்து ஒன்றில் 23 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவமே இன்னும் மறக்க முடியாத அளவுக்கு ஆறாத வடுக்களுடன் இருக்கும் நிலையில், இதோ அடுத்து ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் புனேயின் ஆள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியா ஸ்வார்கேட்டில் 26 வயது நிறைந்த இளம்பெண் ஒருவர், நேற்று அதிகாலை பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது தாம் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய பேருந்து குறித்து அந்தப் பெண், 36 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், விளக்குகள் இல்லாத ஓர் இடத்தைக் சுட்டிக்காட்டி அங்கு நிற்கும் பேருந்துகள் செல்லும் எனக் கூறியுள்ளார்.
மேலும், அந்தப் பெண் தனியாக வந்திருப்பதை அறிந்துகொண்ட அந்த நபர், அப்பெண்ணை விளக்கில்லாத அவர் சுட்டிக்காட்டிய பேருந்து நின்ற இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், ஒரு பேருந்தைக் காட்டி அதில் ஏற வற்புறுத்தியுள்ளார். அவர், ’பேருந்தில் விளக்கு இல்லையே’ எனச் சொல்ல, அதற்கு அந்த நபர், மற்ற பயணிகள் தூங்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காகவே விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றிய பிறகு கதவுகளை மூடிவிட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர், இந்த விஷயத்தைத் தன் தோழிக்கு அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அதன்மூலம் அவர் போலீஸுக்கு தகவல் கொடுக்கவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் கண்டுள்ள காவல்துறை அதிகாரிகள், 8 தனிப்படைகள் அமைத்து அந்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் தத்தாத்ரயா ராம்தாஸ் என தெரிய வந்துள்ளது. காவல் துறையினரின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அந்தப் பேருந்து நிலையம் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும்.
இந்தச் சம்பவம் குறித்து துணை முதல்வர் அஜித் பவார், “பேருந்து நிலையத்தில் எங்கள் சகோதரிகளில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, துயரமானது, நாகரிக சமூகத்தில் அனைவரையும் கோபப்படுத்துகிறது. மேலும் நம்மை வெட்கத்தில் தலைகுனிய வைக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது, மேலும் தூக்கிலிடப்படுவதைத் தவிர வேறு எந்த தண்டனையும் இருக்க முடியாது. இந்த விஷயத்தை விசாரிப்பதில் நேரடி அணுகுமுறையை எடுக்கவும், குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யவும் புனே காவல் ஆணையருக்கு நான் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளேன். முதல்வரும் இந்த குற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு காவல்துறைக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் காவல்துறையினரால் விரைவில் கைது செய்யப்படுவார். மேலும் அவருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இந்த உறுதிமொழியை மகாராஷ்டிராவின் எனது சகோதர சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் அனைவருக்கும் நான் அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புனே மாநகரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஆளும் பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும், அங்குள்ள பாதுகாப்பு அலுவலகத்தையும் அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல், மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, 2012-ல் டெல்லியில் நடந்த கொடூரமான நிர்பயா சம்பவத்தைக் குறிப்பிட்டார். மேலும் அவர், ”டெல்லியில் நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தபோது... மக்கள் ஆட்சியை மாற்றினர் (காங்கிரஸை வெளியேற்றி, ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகாரம் வழங்கினர்). நீங்கள் (பாஜக) பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்களை ஊக்குவிக்கிறீர்கள்... ஆனால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சரத் பவார் அணியைச் சேர்ந்த எம்.பி. சுப்ரியா சுலே, மாநில அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர், “இந்த கொடூரம் நிகழ்ந்துள்ள பகுதியருகேதான் காவல் துறை சோதனைச்சாவடி அமைந்துள்ளது. காவலர்கள் ரோந்து பணியிலும் ஈடுபடும் இடம் அது. அப்படியிருந்தும், ஸ்வார்கேட் பகுதியில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இதன்மூலம், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீது பயமில்லை என்பது வெளிச்சமாகிறது. மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் புனேயில் குற்றங்களைத் தடுக்க தவறிவிட்டது” என தெரிவித்துள்ளார்.