மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், ஆடம்பரமான குடியிருப்புப் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு கூரியர் டெலிவரி வந்துள்ளதாக கூறி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த நபர், “உங்களது மொபைலில் ஓடிபி பார்த்துச் சொல்லுங்கள்” எனக் கேட்டிருக்கிறார். இதற்காக, அந்தப் பெண் தனது மொபைலை எடுக்க வீட்டுக்குள் சென்றுள்ளார். அதற்குள் அந்த ஊழியர் கதவைச் சாத்தியபடியே அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பாலியல் துன்புறுத்துலுக்கு முன்பு அந்தப் பெண் மயக்கத்தில் இருந்துள்ளார்.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்ததுடன், ’நான் மீண்டும் வருவேன்’ எனப் பதிவிட்டுவிட்டுச் சென்றுள்ளான். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மயக்கத்தில் இருந்ததால், அவர் மீது நபர் ஏதாவது மயக்க மருந்து ஸ்பிரேவைத் தெளித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பாலியல் பலாத்காரம், ஒரு பெண்ணைத் தாக்குதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் தொடர்பான பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக துணை காவல் ஆணையர் ராஜ்குமார் ஷிண்டே தெரிவித்தார். அதேநேரத்தில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.