உத்தரப்பிரதேசம் ஃபானா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சோலங்கி. 22 வயதான இவர், மாநில சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். புரோ கபடி லீக்கிலும் நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்பட்டார். இந்த நிலையில், அவர் கிராமத்தில் பயிற்சிக்குச் சென்றபோது, வடிகாலில் தவித்த நாய் ஒன்றை வெளியே எடுத்துக் காப்பாற்றியுள்ளார். ஆனால், அந்த நாய் அப்போது அவரைக் கடித்துள்ளது.
அதை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூன் 26 அன்று, பயிற்சியின்போது பிரிஜேஷுக்கு உணர்வின்மை ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து முதலில் அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரிஜேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளன.
அவரது சகோதரர் சந்தீப் குமார், "திடீரென்று, அவர் தண்ணீரைக் கண்டு பயந்து, வெறிநோய் அறிகுறிகளைக் காட்டினார், ஆனால் குர்ஜா, அலிகார் மற்றும் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூட எங்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது. நொய்டாவில்தான் அவருக்கு வெறிநோய் தொற்று இருக்கலாம் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரிஜேஷின் மரணம் குறித்து அவரது பயிற்சியாளர் பிரவீன் குமார், “பிரிஜேஷ் தனது கையில் ஏற்பட்ட வலியை வழக்கமான கபடி காயம் என்று தவறாகக் கருதினார். கடித்தது சிறியதாகத் தோன்றியது. அது தீவிரமானது என்று அவர் நினைக்கவில்லை. எனவே அவர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறினார்.
அவரது மரணம் குடும்பத்திலும் கபடி வீரர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது மரணத்தைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள், அந்தக் கிராமத்திற்குச் சென்று 29 குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போட்டு, வெறிநாய்க்கடி தடுப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ரேபிஸ் என்பது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு வைரஸ் நோயாகும். இது ஒரு விலங்கு வழி நோய். அதாவது, இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. மனிதர்களில் 99 சதவீத வெறிநாய்க்கடி நோய்களில், நாய்கள் மூலம்தான் பரவுவதற்கான முதன்மை ஆதாரமாக இருக்கின்றன. 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் நாய்கள், பூனைகள், கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகள் போன்ற பாலூட்டிகளைப் பாதிக்கலாம்.
இது பொதுவாக பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் வழியாக, பெரும்பாலும் கடித்தல், கீறல்கள் அல்லது கண்கள், வாய் அல்லது திறந்த காயங்கள் போன்ற சளி தொடர்பு கொள்ளும்போது பரவுகிறது. எனினும், இதை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும். ஆயினும், ரேபிஸை பொதுவாக அறிகுறிகள் தோன்றியவுடன் குணப்படுத்த முடியாது. இதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் பொதுவானவை மற்றும் காய்ச்சல், வலி அல்லது காயத்தைச் சுற்றி கூச்ச உணர்வு, குத்துதல் அல்லது எரிதல் போன்ற அசாதாரண உணர்வுகள் இருக்கலாம். வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தை அடையும்போது, அது மூளை மற்றும் முதுகுத் தண்டில் கடுமையான மற்றும் இறுதியில் ஆபத்தான வீக்கத்தை ஏற்படுத்துகிறது.