புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, திருச்செந்தூர் கோயிலுக்கு திடீர் பயணம் மேற்கொண்டதால், தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு மேலும் தாமதமாகலாம் எனக் கூறப்படுகிறது. பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த ரங்கசாமி, தனது நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் இருந்து தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வர உள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதி உடன்படிக்கை மேற்கொள்வது மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமியிடம் கடந்த வாரம் தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளும், பாஜக + அதிமுக 14 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 2 நிபந்தனைகளை முதலமைச்சர் ரங்கசாமி வைத்த நிலையில், பாஜக அதற்குச் சரியான பதில் அளிக்கவில்லை. நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்து இருந்தார்.
நேற்றைய தினம் டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி சார்பில் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியை, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள் என பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேற்று சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்குச் சென்ற முதலமைச்சர் ரங்கசாமி அங்கு சாமி வழிபாடு செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேசிய ஜனநாயக கூட்டணியில் தாங்கள் இருப்பதாகவும், ஆனால் பேச்சுவார்த்தை இன்னமும் முடிவடையவில்லை எனவும் அலசல் புரசலாக தெரிவித்தார். இதற்கிடையே, பிரதமருடன் ஆலோசனை நடத்திய பின்னர், இன்று பிற்பகலில் முதலமைச்சர் ரங்கசாமியை புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா சந்திப்பதற்கு திட்டமிட்டார். ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்வதற்காக தற்போது திருச்செந்தூர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு நாளை மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்வதில் பாஜக மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி பிடிகொடுக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சரின் சந்திப்பை முதலமைச்சர் ரங்கசாமி தவிர்க்கவே திருச்செந்தூர் சென்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.
அதேநேரத்தில் முதலமைச்சர் தரப்பிடம் கேட்டபோது, இதுகுறித்து முதலமைச்சர் நிபந்தனைகளை தெரிவித்துவிட்டார். அது நிறைவேற்றி தரும் பட்சத்தில் தொகுதிப் பங்கீடு முடிவடையும் என ரங்கசாமி கூறிவிட்டார் என்றும், திருச்செந்தூர் பயணம் ஏற்கேனவே திட்டமிடப்பட்ட பயணம் எனவும் தெரிவிக்கிறார்கள். எப்படியோ முதல்வர் ரங்கசாமியினுடைய திருச்செந்தூர் பயணத்தால் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவாவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.