யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகும்போது அடுத்த துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைக்கப்படும். இந்த தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டிருந்தது. யுஜிசி விதிமுறைகள் 2025 எனும் பெயரில் இந்த விதிமுறைகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இதில், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக நியமிக்கப்படும் தேடுதல் குழுவில் கடந்த மாதம் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
யுஜிசி விதிமுறைகளை திரும்பப் பெறக்கோரிநடந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் மனோஜ் ஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்தனர்.
இதில் உரையாற்றிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களின் கலாசாரங்களும், வரலாறுகளும் சேர்ந்தது தான் இந்திய ஒன்றியம் என்றும் தெரிவித்துள்ளார்.