ஆட்சியரின் காரை மறித்து போரட்டம்
ஆட்சியரின் காரை மறித்து போரட்டம்  PT WEP
இந்தியா

புதுவை: கொரோனாவால் உயிரிழந்த நபர்..ஆம்புலன்ஸ் மறுப்பு; நடுவழியில் ஆட்சியரின் காரை மறித்து போராட்டம்!

PT WEB

புதுச்சேரி, உருளையான்பேட்டை அருகே உள்ள குபேர் நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கோவிந்த்(58). இவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். இன்று திடீரென அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த கோவிந்துக்கு, வயது மூப்பு காரணமாக பல்வேறு இணை நோய்கள் இருந்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த கோவிந்தின் உடலைக் கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸை அரசு மருத்துவமனை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவிந்தின் உறவினர்கள், உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேருவிடம் தகவல் தெரிவித்தனர்.

உயிரிழந்த கோவிந்த்

இது குறித்துக் கேள்விப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நேரு சம்பவ இடத்திற்கு வந்து, உறவினர்களை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது ஆட்சியர் வல்லவன் அலுவலகத்திலிருந்து மதிய உணவுக்கு வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார். இதைக் கேள்விப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரின் காரை துரத்திச் சென்று ராஜீவ்காந்தி சதுக்கத்தில் பிடித்து வழிமறித்து நின்றுள்ளனர். பின்னர் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்ல "ஏன் அரசு ஆம்புலன்ஸ் வழங்கவில்லை" என மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் வழங்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராஜீவ்காந்தி சதுக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை இயக்குநருடன் பேசி அரசு ஆம்புலன்ஸில் உயிரிழந்த கோவிந்தின் உடலை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பின்னர், உயிரிழந்த கோவிந்தின் உடல் அரசு ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் இருந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து கோவிந்தின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், தற்போது 6 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், மருத்துவமனையில் யாரும் சிகிச்சையில் இல்லை என சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வழங்காததைக் கண்டித்து, ஆட்சியரின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.