டெல்லி தேர்தல் எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி சட்டமன்றத் தேர்தல் - அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன?

அடுத்த மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

PT WEB

செய்தியாளர்: ராஜிவ்

டெல்லி சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. 70 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க ஆளும் ஆம் ஆத்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இம்முறை கூடுதலாக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி காய்களை நகர்த்தி வருகிறது. மறுபுறம், காங்கிரஸ், பாஜக தொகுதிகளை வெல்ல போராடி வருகின்றன. இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மி,பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் தொடர்பான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு நிதி உதவி வழங்குவது முதல் மானிய விலையில் மின்சாரம், எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வரை, மூன்று கட்சிகளும் வாக்காளர்களை கவரும் பல முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியுள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவால்

அந்த வகையில், ஆளும் ஆம் ஆத்மி தங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.1,000 உதவி வழங்கும் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் தொகையை மாதத்திற்கு ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் அதற்குமேல் 50% மானியம் வழங்குவதோடு மட்டுமல்லாமல், வாடகைக்கு குடியிருப்போருக்கும் இலவச மின்சாரம் மற்றும் நீர் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச சுகாதாரப் பராமரிப்பு வழங்குவதாகவும் கட்சி உறுதியளித்துள்ளது.

பூஜாரி கிரந்தி சம்மன் யோஜனாவின்கீழ், குருத்வாராக்களின் அனைத்து கோயில் பூசாரிகள் மற்றும் கிரந்திகளுக்கு மாதத்திற்கு ரூ.18,000 வழங்கப்படும். ஆண் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இலவசப் பேருந்து பயணம் கிடைக்கும். அதேநேரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரோ கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்தார். ஏற்கெனவே அக்டோபர் 2019 முதல் டெல்லி அரசு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் அனைத்து பெண்களுக்கும் இலவச போக்குவரத்தை வழங்கியுள்ளது. மேலும் டாக்டர் அம்பேத்கர் சம்மன் உதவித்தொகை திட்டம் மூலம், உயர் கல்வியைத் தொடர சர்வதேச பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறும் பட்டியலின மாணவர்களுக்கான கட்டணம் மற்றும் தங்குமிட/பயணச் செலவுகளை ஈடுகட்டும். டெல்லியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ஆயுள் காப்பீட்டிற்கு ரூ.10 லட்சமும், விபத்து காப்பீட்டிற்கு ரூ.5 லட்சமும், ஒவ்வொரு பெண்ணின் திருமணத்திற்கும் ரூ.1 லட்சமும், அவர்களின் சீருடைகளுக்கு ரூ.2,500ம் வழங்குவதாக ஆம் ஆத்மி உறுதியளித்துள்ளது.

மோடி

பாஜகவை பொறுத்தவரை தாங்கள் ஆட்சிக்கு வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பெண் வாக்காளருக்கும் மாதத்திற்கு ரூ.2,500, எல்பிஜி சிலிண்டர்களுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பை மேம்படுத்துதல், குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முதன்மையான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும். மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ், டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதத்திற்கு ரூ.2,500 வழங்கப்படும். அதேநேரத்தில் ஹோலி மற்றும் தீபாவளிக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.2,000லிருந்து ரூ.2,500 ஆகவும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஆகவும் உயர்த்தப்படும். ஏழைக் குடும்பங்களை ஆதரிப்பதற்காக, குடிசைப் பகுதிகளில் உள்ள அடல் உணவகங்களில் ரூ.5க்கு சத்தான உணவு வழங்கப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட அனைத்து தற்போதைய நலத்திட்டங்களும் தொடரும் என்று உறுதியளித்துள்ளது.

காங்கிரஸ், ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரமும், பியாரி தீதி யோஜனா திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்கப்படும். ஜீவன் ரக்ஷா யோஜனா மூலம், டெல்லியில் வசிக்கும் அனைவருக்கும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அதுபோல், டெல்லியில் உள்ள அனைத்து வேலையில்லா இளைஞர்களுக்கும் ஒரு வருடத்திற்கு ரூ.8,500 வழங்கப்படும். உள்ளூர் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.