சந்தோஷ், பிரியதர்ஷினி எக்ஸ் தளம்
இந்தியா

பிரியதர்ஷினி கொலை வழக்கு |முன்கூட்டியே விடுதலை.. ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்றம்!

சந்தோஷ் குமார் சிங்கிற்கு முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த தீர்ப்பை, டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Prakash J

1996ஆம் ஆண்டு பிரியதர்ஷினி மட்டூ என்ற மாணவி டெல்லியில் சட்டம் படித்து வந்தார். அப்போது அவர், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் இதுதொடர்பான வழக்கில் சந்தோஷ் குமார் சிங் என்ற நபர் கைது செய்யப்பட்டார். டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவராக இருந்த சிங், டிசம்பர் 3, 1999 அன்று இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் அக்டோபர் 27, 2006 அன்று தீர்ப்பை மாற்றியமைத்து. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததுடன் அவருக்கு மரண தண்டனையும் விதித்தது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனான சிங், உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அக்டோபர் 2010இல், உச்ச நீதிமன்றம் சிங்கின் தண்டனையை உறுதி செய்தது. ஆனால் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இந்த நிலையில், சந்தோஷ் குமார் சிங்கிற்கு முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த தீர்ப்பை, டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக நீதிபதி சஞ்சீவ் நருலா, "நீதிமன்றம் அவரிடம் சீர்திருத்தக் கூறுகளைக் கண்டறிந்துள்ளது. SRB முடிவு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயத்தை மீண்டும் SRB-க்கு பரிந்துரைத்துள்ளேன். கைதிகளின் மனுக்களை பரிசீலிக்கும்போது எஸ்ஆர்பி பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல்களையும் தாம் வகுத்துள்ளேன். நீண்டகால சிறைவாசிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பான முக்கியமான வழக்குகளை ஆராயும் எஸ்ஆர்பி, குற்றவாளிகளின் மனநல மதிப்பீட்டை நடத்த வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அவ்வாறு செய்யப்படவில்லை” என அதை நிராகரித்து ரத்து செய்துள்ளார்.

Delhi high court

முன்னதாக, அக்டோபர் 21, 2021 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தனது முன்கூட்டிய விடுதலையை நிராகரித்த எஸ்ஆர்பியின் பரிந்துரையை ரத்து செய்யுமாறு சிங் தனது மனுவில் கோரியிருந்தார். ”சிங் ஏற்கெனவே 25 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டார். அதில் அவரது விடுதலையும் அடங்கும். அவர் சமூகத்திற்கு பயனுள்ள உறுப்பினராக இருப்பார். கடந்த பல ஆண்டுகளாக அவர் திறந்தவெளிச் சிறையில் இருக்கிறார்” என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். மேலும், செப்டம்பர் 18, 2024 அன்று மற்றொரு SRB கூட்டம் நடத்தப்பட்டதாகவும், முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவரது வழக்கு மீண்டும் நிராகரிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்திற்கு முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.