கர்நாடக மாநிலத்தில் சி.இ.டி. எனும் பொது நுழைவுத் தேர்வு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பி அடிப்பதைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் 17ஆம் தேதி நடைபெற்ற இறுதித் தேர்வின் போது பீதர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவரிடம், அதிகாரிகள் பூணூலை கழற்ற கூறியுள்ளனர். ஆனால் அவர் பூணூலை கழற்ற மறுத்துவிட்டார்.
இதனால் அவரை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் தேர்வு எழுதாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இதேபோல் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி சராவதி நகர் ஆதிசுஞ்சனகிரி பி.யூ. கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் 2 மாணவர்களின் பூணூலை ஊழியர்கள் வலுக்கட்டாயமாக வெட்டி எறிந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவின் பிதர் மாவட்டத்தில் உள்ள சாய் ஸ்பூர்த்தி பி.யு கல்லூரியின் முதல்வர் டாக்டர் சந்திர சேகர் பிரதர் மற்றும் ஊழியர்கள், சதீஷ் பவார் ஆகியோர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அகில கர்நாடக பிராமண மகாசபாவின் தலைவர் ரகுநாத், இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ”தேர்வு எழுதும் போது 'ஜானு' நீக்கப்பட்டது பிராமண சமூகத்தினரிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அவர்களை எவ்வளவு சமாதானப்படுத்தினாலும், எங்கள் சமூகத் தலைவர்கள் மாவட்ட வாரியாக போராட்டம் நடத்துவோம் என்று வலியுறுத்தியுள்ளனர்” எனத் தெரித்த அவர், முதல்வர் சித்தராமையா இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். அதேபோல், இந்தச் சம்பவத்திற்கு பாஜகவும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது.