பிரிக்ஸ் உச்சி மாநாடு முகநூல்
இந்தியா

பிரிக்ஸ் உச்சி மாநாடு இரண்டாம் நாள்... பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய கருத்து!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான கருத்து ஒன்றை உலகிற்கு பகிர்ந்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நிறுவன உறுப்பு நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய கூடுதல் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-ஆவது உச்சிமாநாடு, ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக வரிக் கொள்கைகள், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், காஸாவில் நிலவும் மனிதாபிமானப் பிரச்னை போன்ற முக்கிய விவகாரங்களின் பின்னணியில் நடைபெறும் இந்த மாநாடு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

17-ஆவது பிரிக்ஸ் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமா் மோடியை அதிபா் லுலா டசில்வா வரவேற்றாா். பின்னா், பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான உலகை வடிவமைக்கும் மகத்தான திறன் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு உள்ளது. இது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உலக நன்மைக்கான வலுவான சக்தியாக நிலைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, அத்தியாவசிய கனிமங்களை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி உள்ளார். மேலும், அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள் எப்போதும் பாதிக்கப்படாமல் இருப்பதை உலக நாடுகள் உறுதிபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். சுய நலனுக்காக பிற நாடுகள் மீது இவற்றை ஆயுதமாக பயன்படத்தக் கூடாது வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த ஆண்டு இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் கூட்டமைப்பு, மனிதாபிமான அணுகுமுறைக்கு முன்னுரிமை வழங்கும் எனக் கூறினார்.

மாநாட்டின் நிறைவாக, பருவநிலை மாறுபாடு கட்டமைப்புக்கு நிதியளித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிா்வாகம் தொடா்பாக இரு பிரகடனங்கள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாநாட்டைத் தொடா்ந்து, தலைநகா் பிரேசிலியாவுக்கு பயணிக்கும் பிரதமா் மோடி, அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வாவுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளாா்.