இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் ஒன்று, மும்பையிலும் அமைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூன் 26ஆம் தேதி ஐஐடி-பாம்பே கட்டடத்திற்குள் இருந்த சோபாவில் நபர் ஒருவர் தூங்கியுள்ளார். இதைக் கண்ட ஐஐடி ஊழியர், அவரிடம், ”நீங்கள் யார்” என்று கேட்டுள்ளார். ஆனால் அவருடைய கேள்விக்கு பதிலளிக்காமல் அந்த நபர் ஓடியுள்ளார். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள், சிசிடிவி மூலம் அவர் பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளனர். அதன்படி, அவரது பெயர் பிலால் அகமது டெலி எனவும், அவர் பல்கலைக்கழக மாணவர் அல்ல எனவும், அவர் கடந்த சில நாட்களாக வளாகத்தில் சுற்றித் தி்ரிவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஐஐடி அதிகாரிகள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிலாலை கைது செய்தனர். ஜூலை 7 வரை அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அதிகாரிகளின் விசாரணையில், “அவர் விடுதி அறைகளில் சோபாவில் தூங்கியுள்ளார். கல்லூரியில் விரிவுரைகளில் கலந்துகொள்வது மற்றும் இலவச காபி கிடைக்கும் இடங்களுக்குச் செல்வது அவரது வழக்கமாக இருந்துள்ளது. அவர், தன்னை ஒரு பிஎச்டி மாணவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு போலி சேர்க்கை ஆவணங்களைக் கொடுத்துள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த கருத்தரங்கிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். தவிர, பிலால் கடந்த ஆண்டும் வளாகத்தில் ஒரு மாதம் தங்கியிருந்ததாகவும், ஆனால் யாரும் அவரை கவனிக்கவில்லை” என்றும் கூறப்படுகிறது.
மறுபுறம், பிலாலின் தொலைபேசியைக் கைப்பற்றிய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதை ஆய்வு செய்தனர். ஆனால் அதிலிருந்து அவர் நிறைய தரவுகளை நீக்கிவிட்டதைக் கண்டறிந்துள்ளனர். சைபர் ஆய்வகத்தின் உதவியுடன் அதிகாரிகள் அதை மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் பிலால், ஐஐடி வளாகத்தின் வீடியோக்களையும் எடுத்துள்ளார். தவிர, 21 மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்கியதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர் நடத்தி வரும் பல வலைப்பதிவுகளுக்காக அவற்றை உருவாக்கியதாகக் விசாரணையின்போது கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, அதிக பணம் சம்பாதிக்க சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவராக மாற விரும்பியுள்ளார்.
தற்போது அவர், குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அங்கு அவரது மாத வருமானம் ரூ.1.25 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த நபர், 12 ்ஆம் வகுப்பு முடித்த பிறகு, மென்பொருள் மேம்பாட்டில் ஆறு மாத படிப்பை முடித்துள்ளார். 2024ஆம் ஆண்டு, பிலால் பஹ்ரைனுக்குப் பயணம் செய்துள்ளார். அதற்கு முன்பு, அவர் துபாய்க்கும் பயணம் செய்துள்ளார். இதையடுத்து, உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளும் பிலாலை விசாரித்து வருகின்றன” என்கின்றனர் அதிகாரிகள்.