ஜம்மு காஷ்மீரின் அனந்த நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்தவர்கள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் பலர் காயமடைந்தனர். இதனால், அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிரடியான எதிரெதிர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக, பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இரண்டு நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்தியா உத்தரவிட்டிருந்தது. இப்படி எல்லையில் பாதுக்காப்பு பணிகள் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் 6 நாட்களாக இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவுடனான உறவு மோசமடைந்துள்ளதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. மேலும் எல்லைக் கட்டுப்பாட்டுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மாகாணத்தின் தலைவர் சௌத்ரி அன்வர் உல் ஹக் வெளியிட்டுள்ள வீடியோவில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே உள்ள மக்கள் இரண்டு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் கூறியுள்ளார். மேலும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக 3.5 மில்லியன் டாலர் (சுமார் ஒரு பில்லியன் ரூபாய்) அவசர நிதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு ஒதுக்கியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் இருந்து ஸ்கார்டுவுக்கு செல்லும் இரண்டு விமானங்களும், கில்கிட்டுக்கு செல்லும் நான்கு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.