அம்பேத்கர் குறித்தான உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில் எதிர்க்கட்சியினர் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். அவற்றுக்கு பிரதமர் மோடி இன்று பதிலளித்துள்ளார். இவ்விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது? பார்க்கலாம்..
நேற்றைய தினம் நடந்த நிகழ்வின் முடிவில், மாநிலங்களவையில் அமித் ஷா உரை நிகழ்த்தினார். அப்போது அவர், “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் முன்பு கூடிய எதிர்க்கட்சியினர் கைகளில் அம்பேத்கரின் படங்களை பிடித்து ’ஜெய் பீம்’ என்ற முழக்கமிட்டதுடன், அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றம் மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்ட சூழலில், அம்பேத்கரை முழுமையாக மதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தன் பதிவில் பிரதமர், “அம்பேத்கரால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம். அதற்காக அவரை நாங்கள் மதிக்கிறோம். அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு பணியாற்றி வருகிறது. டாக்டர் அம்பேத்கரை முழுமையாக நாங்கள் மதிக்கிறோம். அம்பேத்கருக்கு எதிராக செய்த செயலை காங்கிரஸ் கட்சிதான் மறைக்க பார்க்கிறது.
அம்பேத்கரை 2 முறை தேர்தலில் தோல்வியடைய செய்த கட்சிதான் காங்கிரஸ். அம்பேத்கருக்கு பாரத ரத்னாவை மறுத்தது காங்கிரஸ்; அம்பேத்கருக்கு எதிராக பரப்புரை செய்தவர் நேரு.
காங்கிரஸ் அவர்கள் விரும்பியபடி பேச எல்லா முயற்சியையும் செய்யலாம். ஆனால், SC/ST சமூகங்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் காங்கிரஸின் ஆட்சியில்தான் நடந்துள்ளன என்பதை அவர்களால் மறுக்க முடியாது. பல ஆண்டுகளாக, அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும், SC மற்றும் ST சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் செய்யவில்லை. இதைத்தான் அவையில் அமித்ஷா எடுத்துரைத்தார். காங்கிரஸ் அதனால் அதிர்ந்துபோய், போலியாக வேறொரு கருத்தை சித்தரிக்கிறது. ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். டாக்டர் அம்பேத்கரைப் பொறுத்தவரை, அவர் மீது எங்களுக்கு மரியாதையும் மதிப்பும் எப்போதும் உண்டு” என்றுள்ளார்.