செனாப் ரயில் பாலம் முகநூல்
இந்தியா

உலகின் உயரமான செனாப் ரயில் பாலம்: சிறப்பம்சங்கள் என்ன?

பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள உலகின் உயரமான ரயில் பாலமான செனாப், சிவில் இன்ஜினியரிங் துறையில் ஒரு அற்புதமாகக் கருதப்படுகிறது. இது எவ்வாறு கட்டப்பட்டது, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

PT WEB

இந்தியாவின் பொறியியல் திறமைக்கும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் சின்னமாக அமைந்துள்ளது செனாப் பாலம். உலகின் உயரமான ரயில் பாலம், வளைவு பாலம் என்ற பெயர் பெற்ற செனாப், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டத்தின் 42 ஆண்டுகால பணிகளின் நிறைவைக் குறிக்கிறது. மொத்தம் 272 கிலோ மீட்டர் தொலைவிலான வழித்தடத்தின் பணிகள் 1997ல் தொடங்கியது. 161 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடம் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டது.

இறுதியாக 111 கிலோ மீட்டர் தொலைவுள்ள கத்ரா-பனிஹால் வழித்தட பணிகள் நிறைவு பெற்றன. இதில் தான், ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது பக்கால் மற்றும் கெளரி இடையே 1,400 கோடி ரூபாய் செலவில் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. செனாப் நதிக்கரை மேல் இருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இது பாரிஸின் உலக புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் அதிகமாகும். கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் இணைப்பை மேம்படுத்தும். மொத்தம் 1,315 மீட்டர் நீளமுள்ளள இந்த எஃகு வளைவு மற்றும் கான்கிரீட் அமைப்பிலான பாலம், மிகப்பெரிய பூகம்ப அபாய பகுதியான மண்டலம் ஐந்தில் அமைந்துள்ளது.

கட்டுமானத்தில் சிக்கலாக இருந்தது பாறை தன்மையுள்ள நிலம் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்தது. மேலும் செனாப் நதியின் ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படாமலும் கட்டுமானம் முடிக்கப்பட்டிருக்கிறது. சாலை இணைப்பு எதுவும் இல்லாத காரணத்தால், மிகப்பெரிய இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் அந்த இடத்திற்கு கொண்டு செல்வதில் மற்றொரு முக்கிய சவாலாக இருந்தது. கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் மேற்பார்வையில் உருவாகியிருக்கும் செனாப் பாலத்திற்கு ஐஐடி டெல்லி, ரூர்கி, இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என அரசின் பல்வேறு அமைப்புகள், தென்கொரியா, பின்லாந்து போன்ற நாடுகளின் உயர்தரமிக்க நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டது.

பாலத்திற்காக 28,660 மெட்ரிக் டன் எஃகு பயன்படுத்தப்பட்டு, 26 கிலோ மீட்டர் நீளமுள்ள போக்குவரத்துக்கான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிக்கலான கட்டடங்களையோ அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களையோ 3டி வடிவத்தில் வடிவமைக்கும் டெக்லா எனும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. 120 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியதாக செனாப் ரயில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும். 8 ரிக்டர் அளவுகோல் வரையிலான பூகம்பங்களை தாங்கும் திறனும், 40 டன் டிஎன்டி வெடிப்புகளை தாங்கும் சக்தியும் கொண்டது. இந்தியாவின் மிகவும் சிக்கலான மற்றும் தனிமையான புவியியில் பகுதியில் கட்டப்பட்டுள்ள செனாப் ரயில் பாலம் பொறியியல் துறையில் ஓர் அற்புதமாக பார்க்கப்படுகிறது.