28 சதவிகித ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் இருக்கும் என கூறியிருந்தார். ஜிஎஸ்டி வரி முறையில் சிறு வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாகவும் அடுத்த தலைமுறைக்கான மறுசீரமைப்பாகவும் இது இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதம், 18சதவிகிதம் என இரண்டு வகையாக மட்டும் இருக்கும் வகையில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தினசரி உபயோகிக்கும் பொருட்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 28 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் 90 சதவிகித பொருட்களுக்கு 18 சதவிகிதமாக குறைக்கப்பட உள்ளது.
ஆடம்பரப் பொருட்களுக்கு 40 சதவிகிதம் அளவுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. 2017ஆம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதம், 12சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என நான்கு பிரிவுகளாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.