பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ Pt web
தமிழ்நாடு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ.. மோடி, விஜய் இணைந்து தொடங்கி வைப்பு! பொதுமக்கள் எப்போது பயணிக்கலாம்?

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ சேவையை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் இணைந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

Premkumar S

சென்னையில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் ஆகிய இரண்டு மெட்ரோ வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. நீல வழித்தடம் விம்கோ நகரில் தொடங்கி, சென்னை விமான நிலையம் வரை நீள்கிறது. பச்சை வழித்தடம் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை நீள்கிறது. இந்த இரண்டு வழிதடங்களும், தற்போது சென்னையில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கியிருந்தது.

Chennai Metro

இதன் ஒரு பகுதியாக, ரூ. 4,900 கோடி செலவில், வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. 14.64 கிலோ மீட்டர் நீளத்திற்கான இந்த வழித்தடம், பாதுகாப்பு ஒப்புதல் பெற்று 7 மாதங்கள் ஆன பிறகும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமலே இருந்தது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சிக்கு தேதி ஒதுக்காமல் இருந்ததே, திறப்பு விழா நடத்ததாதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்பட்டது. 

இந்தச்சூழலில் தான், தேர்தல்கள் முடிந்திருக்கும் நிலையில், அக்டோபர் 11-ம் தேதியான இன்று பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியிருந்தார். அதன்படி, இன்று காலை தமிழகம் வந்த பிரதமரை முதல்வர் விஜய் விமான நிலையம் சென்று வரவேற்றார். தொடர்ந்து, சாலை மார்க்கமாக போரூர் சென்ற அவர்கள், அங்கு வடபழனி - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளனர். தொடர்ந்து, மெட்ரோவில் பிரதமர் மோடியும் முதல்வர் விஜயும் இணைந்து பயணித்திருக்கின்றனர். இதன்மூலம், சென்னைப் பெருநகருடன் மேற்கு பகுதியை இணைக்கும் மெட்ரோ பயன்பாட்டு வந்துளது.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ

இந்த மெட்ரோவில், இன்று மாலை 4 மணி முதல் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ரயில் சேவை இயக்கப்படும்.