model image meta ai
இந்தியா

தேசிய கீதத்துக்கு முன்பு ’வந்தே மாதரம்’ கட்டாயம்.. புதிய விதிகள் அமல்.. மத்திய அரசு உத்தரவு!

மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு விழாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Prakash J

இந்தியா முழுவதும் உள்ள அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மற்றும் நிறுவனங்களில் வந்தே மாதரம் எவ்வாறு இசைக்கப்பட வேண்டும், பாடப்பட வேண்டும் மற்றும் மதிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதுகுறித்தான புதிய விதிகளை இங்கு பார்ப்போம்..

வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி எழுதப்பட்ட ’வந்தே மாதரம்’பாடல், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 ஜனவரி 24-ஆம் தேதி தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. ’வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனைப் பாட வழிகாட்டுதல்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி,

  • அரசு விழாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

  • காங்கிரஸால் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிலிருந்து வரலாற்று ரீதியாக விலக்கப்பட்ட நான்கு சரணங்கள் உட்பட பாடலின் முழு ஆறு சரண பதிப்பும் அதிகாரப்பூர்வ விழாக்களில் இசைக்கப்பட வேண்டும்.

  • மேலும், இந்த பாடல் எப்போது பாடப்பட்டாலும் அல்லது இசைக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும்.

  • தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் இரண்டும் ஒரே நிகழ்வில் பாடப்பட்டால், முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும்.

  • பாடலைப் பாடுவதற்கான மொத்த கால அளவு சுமார் 3 நிமிடங்கள் 10 வினாடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • தேசியக் கொடியை ஏற்றும்போதும், முறையான நிகழ்வுகளில் குடியரசுத் தலைவர் வருகை மற்றும் புறப்படும்போதும், அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும்.

  • ஆளுநர்கள் முறையான மாநில விழாக்களுக்கு வரும்போது அல்லது புறப்படும்போது, பொதுமக்கள் விருது வழங்கும் விழாக்களின்போது மற்றும் தேசியக் கொடி அணிவகுப்பின்போது இந்தப் பாடல் இசைக்கப்பட வேண்டும்.

எனினும், சினிமா தியேட்டர்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், சட்டத்தின்கீழ், தேசிய பாடலகளை சீர்குலைப்பவர்களுக்கோ அல்லது இடையூறு விளைவிப்பவர்களுக்கோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். தேசியப் பாடலை மரியாதையுடன் கடைப்பிடிப்பதை முறைப்படுத்துவதையும், அதிகாரப்பூர்வ விழாக்கள், பள்ளிகள் மற்றும் பொது விழாக்களில் சீரான நடைமுறையை உறுதி செய்வதையும் இந்த முடிவு நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.

வந்தே மாதரம் என்பது 1870களில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஒரு தேசபக்தி பாடலாகும். இது முதன்முதலில் 1882இல் அவரது பெங்காலி நாவலான ஆனந்தமதததில் வெளியிடப்பட்டது. அதன்பிற்கு, 1937ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் அப்பாடலை தேசியப் பாடலாக ஏற்றுக்கொண்டது. ஆனால் அப்பாடலின் பிந்தைய வசனங்கள் இந்து தெய்வங்களைக் குறிப்பிடுவதால் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தேர்வு செய்தது. தற்போதும் அதுவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.