1991ல் அறிமுகம் செய்யப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி, இந்த சட்டத்தின் சில பிரிவுகளின் விளக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் அஸ்வினி உபாத்யாய என்ற வழக்கறிஞர் உள்ளிட்டோர், இந்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க கோரியுள்ளனர். கடந்த 2022, மார்ச் 12ல் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வரும், 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் தனி அமர்வு இதை விசாரிக்க உள்ளது.