டெல்லி உயர்நீதிமன்றம் எக்ஸ் தளம்
இந்தியா

”தொடுதல் பாலியல் வன்புணர்வு அல்ல” - போக்ஸோ வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்துசெய்த டெல்லி உயர்நீதிமன்றம்!

போக்ஸோ வழக்கு ஒன்றில், உடல்ரீதியான தொடுதலால் மட்டுமே அதை பாலியல் உறவு என்று எடுத்துக்கொள்ள முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை விடுவித்துள்ளது.

Prakash J

சமீபகாலமாக போக்ஸோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதில் பலர், பெண் குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி அவர்களைக் கொலைசெய்துவிடுவது ஒருபுறமிருக்க, மறுபுறம் அத்தகைய பாதிப்புகள் இன்றியும் ஒருசில இளைஞர்கள் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதுகுறித்த வழக்கு ஒன்றில், உடல்ரீதியான தொடுதலால் மட்டுமே அதை பாலியல் உறவு என்று எடுத்துக்கொள்ள முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை விடுவித்துள்ளது.

போக்ஸோ சட்டம்

2017ஆம் ஆண்டு, 14 வயது பெண்ணின் தாயார், தனது மகளை நபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகப் புகார் அளித்தார். பின்னர், குற்றம்சாட்டப்பட்டவருடன் அந்தச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

பின்னர் விசாரணை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, பாதிப்புக்குள்ளான சிறுமி, “அவருடன் தானாக முன்வந்து சென்றதாகவும், அவர் தனது காதலன் எனவும், மேலும் நானும் அவரும் வாடகை அறையில் ஒன்றாக தங்கினோம். அப்போது, அவர் என்மீது எந்தவிதமான உடல்ரீதியான தாக்குதலையும் செய்யவில்லை. என்னுடன் தவறான செயல்களில் ஈடுபடவில்லை.

ஆனால், உடல்ரீதியான தொடுதல் இருந்தது என்று மட்டுமே” எனத் தெரிவித்தார். எனினும் இந்த தீர்ப்பின்போது குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அந்த நபர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம்

இந்த மனு நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “உடல்ரீதியாக தொடுதல் மற்றும் பாலியல் செயல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகிய மூன்றுக்கும் சாட்சிகள் மூலம் வித்தியாசம் அறிந்து அதன் பின்தான் முடிவுக்கு வர வேண்டும். சிறுமியுடன் உடல்ரீதியான தொடுதலே பாலியல் உறவு என விசாரணை நீதிமன்றம் எவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தது?

பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர் என்பதாலேயே அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வன்புணர்வு போக்ஸோ வழக்கில் சேரும். ஆனால் உடல்ரீதியான தொடுதலை மட்டுமே பாலியல் வன்புணர்வுக்கான போக்ஸோ வழக்காகக் கருத முடியாது. முந்தைய விசாரணையில் சிறுமி, உடல்ரீதியான தொடுதல் என்று குறிப்பிட்டிருந்தாலும், வன்புணர்வு என்ற அர்த்தத்தில்தான் அவர் குறிப்பிட்டாரா என்று தெளிவுபடுத்தப்படவில்லை” எனக் கூறிய நீதிபதிகள் அவருடைய ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.