வட இந்தியாவில் பெரும்பாலும் பல மாநிலங்களில் ‘கர்வா சவுத்’ என்ற பெயரில் நோன்பு பண்டிகை கொண்டாடப்படுகிறது. கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ, மணமான இந்துப் பெண்கள் விரதமிருந்து இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
இதற்காக அவர்கள், சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம்வரை விரதம் இருப்பார்கள். பின் அந்த நாளின் இறுதியில் சல்லடை வழியாக நிலவு மற்றும் தங்கள் கணவரின் முகத்தைப் பார்த்தபிறகு, நோன்பை நிறைவுசெய்வர். இதன்மூலம், தனது கணவர்களின் ஆயுள் கூடும் என அவர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில், ’கர்வா சவுத்’ பண்டிகையை அனைத்துப் பெண்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக் கோரி நரேந்திர குமார் மல்ஹோத்ரா என்பர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ’சமூகத்தில் விவாகரத்து பெற்ற, கணவரைப் பிரிந்த, லிவ் இன் உறவில் இருக்கும் பெண்கள் மற்றும் விதவைகள் என விதிவிலக்கின்றி அனைத்துப் பெண்களும் இந்தப் பண்டிகையை கடைபிடிக்க வேண்டும், பின்பற்றவில்லை என்றால் தண்டனை வழங்கப்படும் அளவிற்கு சட்டம் இயற்றப்பட நீதிமன்றம் உத்தரவளிக்க வேண்டும்’ எனக் கூறி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஷீல் நாகு மற்றும் சுமீத் கோயல் தலைமையிலான அமர்வு, அதை தள்ளுபடி உத்தரவிட்டது. மேலும், மனுதாரருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத் தொகையை ஏழை நோயாளிகளின் நல்வாழ்வு நிதியில் செலுத்த அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.