உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் pt web
இந்தியா

1995ல் தொடங்கிய சட்டப்போராட்டம்..உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 28 ஆண்டுகளுக்குபின் கிடைத்த அரசுப்பணி

Angeshwar G

1995 ஆம் ஆண்டு அங்கூர் குப்தா என்பவர் தபால் நிலைய உதவியாளர் பணிக்காக விண்ணப்பித்திருந்தார். தொடர்ந்து வேலை வழங்குவதற்கு முன் அளிக்கப்படும் பயிற்சி காலத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தொழிற்கல்வி பாடத்திட்டத்தை இன்டர்மீடியேட் முறையில் முடித்திருந்த காரணத்தால் அவரது பெயர் தகுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து தன்னைப்போல் தகுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சிலருடன் சேர்ந்து 1999 ஆம் ஆண்டு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்ட போது தீர்ப்பாயம் குப்தா பிரிவினருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து அஞ்சல் துறை 2000 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த மனுவை 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட மறு ஆய்வு மனுவை மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

இதனை அடுத்து அஞ்சல் துறை உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதி பேலா எம். திரிவேதி மற்றும் திபங்கார் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “விண்ணப்பதாரர் நியமனத்திற்கான உரிமையை கோரமுடியாது. ஆனால் அவர் தகுதிப்பட்டியலில் இடம்பெற்றுவிட்டால் அவர் நியாயமான முறையில் நடத்தப்படுவதற்கான அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது.

அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை. தேர்வுச் செயல்பாடுகளில் அனுமதிக்கப்பட்டும், தகுதிப் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றிருக்கும் சூழலில் பணி நியமனம் கோருவதற்கு உரிமை இல்லை. ஆனால் நியாயமான, பாரபட்சமற்ற முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற உரிமை அவருக்கு உண்டு. அரசியலமைப்பின் 12 ஆவது பிரிவின் படி, காரணம் இல்லாமல் விண்ணப்பதாரரை வெளியேற்றும் அதிகாரம் இல்லை” என தெரிவித்தனர்.

மேலும் கூறிய நீதிபதிகள், அங்கூர் குப்தாவை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி அவரை நேர்காணல் செய்து, தகுதிப் பட்டியலிலும் இடம்பெற வைத்துள்ளனர். 1996 ஆம் ஆண்டில் மார்ச் 15 ஆம் தேதி முதல் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள் அங்கூர் குப்தாவை ஒரு மாதத்திற்குள் பணியமர்த்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

தகுதி காண் காலத்தில் அவரது பணி திருப்திகரமாக இருந்தால் அவர் பணி உறுதி செய்யப்படுவார். அந்த காலத்தில் அவரது பணி திருப்திகரமாக இல்லை எனில் மேல்முறையீடு செய்தவர் சட்டப்படி விஷயத்தை தொடரலாம் எனவும் உத்தரவிட்டது. மேலும், குப்தா வேலையில் இல்லாததால் சம்பள நிலுவைத் தொகை கோரமாட்டார் என்றும் 1995 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டவர்களுடன் பதவி மூப்பு பெறும் உரிமை பெற மாட்டார் என்றும் தீர்ப்பளித்தது.