பிரகலாத் சிங் படேல் முகநூல்
இந்தியா

’அரசாங்கத்திடம் யாசகம் பெருவது பொதுமக்களுக்கு பழகிவிட்டது’ - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

பாஜக அமைச்சரின் பேச்சு: பொதுமக்களை அவமதிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு.

ஜெனிட்டா ரோஸ்லின்

அரசாங்கத்திடம் பிச்சையெடுப்பதை பொதுமக்கள் பழக்கமாக்கி கொண்டதாக பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடந்துவருகிறது. இங்கு அங்கு பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் பிரகலாத் சிங் படேல். இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

பிரகலாத் சிங் படேல்

இவர்தான், மத்தியப்பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் வீராங்கனை ராணி அவந்திபாய் லோதியின் சிலை திறப்பு விழாவின் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இவரது பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பிரகலாத் சிங் படேல் பேசியதாவது:

”மக்கள் அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். தலைவர்களை சந்திக்க வரும்போது ஒரு கூடை நிறைய மனுக்களை கொண்டு வருகிறார்கள். மேடையில் மாலையை அணிவித்துவிட்டு, அப்படியே கையில் ஒரு மனுவையும் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். இது ஒரு நல்ல பழக்கம் அல்ல.

கேட்பதற்கு பதிலாக கொடுக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். இது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் மற்றும் பண்பட்ட சமூகத்தை உருவாக்க உதவும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நாம் எந்த அளவிற்கு இலவசங்களுக்கு பழகி கொள்கிறோமோ அந்த அளவிற்கு தியாகிகளை கொச்சைப்படுத்துகிறோம். ஒரு தியாகிக்கு செய்யும் உண்மையான மரியாதை அவரது கொள்கையை பின்பற்றுவதுதான். பிச்சை எடுத்த ஒரு தியாகியின் பெயரை கூற முடியுமா?.. எந்த தியாகியும் யாரிடமும் எதையும் பிச்சை ஏட்டதில்லை என்பதை நிச்சயமாக சொல்வேன். கலாசாரம் மிக்க சமுதாயத்தையும் உருவாக்குவீர்கள். பிச்சைக்காரர்கள் படையை ஒன்று திரட்டுவது சமுதாயத்தை பலப்படுத்தாது பலவீனப்படுத்தும். ” என்று பேசியுள்ளார்.

பொதுமக்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பேசியிருப்பது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பினை முன்வைத்து வருகின்றனர்.