புதுச்சேரி சிறுமியின் இறுதி ஊர்வலம்
புதுச்சேரி சிறுமியின் இறுதி ஊர்வலம் புதிய தலைமுறை
இந்தியா

மக்கள் வெள்ளத்தில் சிறுமியின் இறுதி ஊர்வலம்: திணறும் புதுச்சேரி...

webteam

புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல்போன நிலையில், 72 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை - மார்ச் 5) அம்பேத்கர் நகர் வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்ட மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

புதுச்சேரி சிறுமி சடலமாக கண்டெடுப்பு

இந்த சூழலில் சிறுமி உயிரிழப்பு தொடர்பாக 19 வயதுடைய கருணாஸ் என்ற இளைஞரையும், 57 வயதான விவேகானந்தன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் உடலை வேஷ்டியில் மூட்டையாக கட்டி வாய்க்காலுக்குள் அவர்கள் போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என புதுச்சேரியில் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்ததையடுத்து, போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறுமியின் இறுதி ஊர்வலம்

பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் உடல் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு இன்று தகனம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் உடல் ஊர்வலமாக மயானத்திற்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த இறுதி ஊர்வலத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்றனர். புதுச்சேரி மக்கள் அனைவருமே ஒரே இடத்தில் கூடியது போன்ற அக்காட்சி, பார்ப்போரையும் நெகிழச்செய்தது. அனைவரும் இணைந்து சிறுமியின் இறப்புக்கு நியாயம் கேட்டு குரல் கொடுத்தனர்.