காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி, இத்தாலியில் தனது குழந்தைப் பருவம், கல்லூரி வாழ்க்கை, முன்னாள் ராஜீவ் காந்தி உடனான காதல் திருமணம், இதைத் தொடர்ந்து ராஜீவ்-ன் படுகொலை. இதனால், அவர் பொதுவாழ்க்கை வந்தது என அவர் வாழ்க்கை கடந்து வந்த சம்பவங்கள் குறித்து "பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்" என்ற தலைப்பில் சுயசரிதைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
இந்த புத்தகம் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நூலின் சில பகுதிகளில் மாற்றங்கள் செய்யவும் சில பகுதிகளை நீக்கவும் இந்த புத்தகத்தை வெளியிடவிருந்த பெங்குயின் பதிப்பகம் பரிந்துரை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மாற்றங்களை சோனியா காந்தி மறுத்ததால், பெங்குவின் பதிப்பகம் இந்த நூலை வெளியிடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த கருத்து வேற்றுமை இந்திய பதிப்பில் மட்டுமே என அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் பெங்குவின் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 'ஆல்ஃபிரட் ஏ. நாஃப்' பதிப்பகம் மூலமாக, திட்டமிட்டபடி வரும் நவம்பர் 10-ஆம் தேதி இப்புத்தகம் சர்வதேச அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்குயின் நிறுவனம் விலகியதைத் தொடர்ந்து, 'ஹார்பர் காலின்ஸ்' உள்ளிட்ட முன்னணி இந்தியப் பதிப்பகங்கள் இப்புத்தகத்தை இந்தியாவில் வெளியிட்டு விநியோகிக்கும் உரிமையைப் பெற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில் தான், சோனியா காந்தியின் மீதான மோடியின் விமர்சனங்களை அவர் விரிவாக இப்புதகத்தில் பகிர்ந்திருந்தாகவும், குறிப்பாக, 2004-ல் குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி தன்னை 'ஜெர்சி மாடு' என்று அழைத்த ஒரு கருத்தையும் அவர் மேற்கோள் காட்டியதாகவும், இதை பதிப்பகத்தார் நீக்கக் கோரியதாகவும் ஆனால், சோனியாகாந்தி உறுதியுடன் இருந்ததால், பதிப்பகம் நூல் வெளியீட்டிலிருந்து விலகியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாஜக குறித்தான விமர்சங்களையும் பதிப்பகம் நீக்கக்கோரியதாக கூறப்படுகிறது.