பசுபதி பரஸ் x page
இந்தியா

NDA கூட்டணியிலிருந்து விலகிய பசுபதி பரஸ்.. பீகார் மாநிலத்தில் பின்னடைவா?

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரின் கட்சி விலகியுள்ளது, பீகார் பேரவை தேர்தலில் அக்கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது.

PT WEB

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரின் கட்சி விலகியுள்ளது, பீகார் பேரவை தேர்தலில் அக்கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பசுபதி பரஸ். இவர், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் இளைய சகோதரர் ஆவார்.

கூட்டணியில் தங்கள் கட்சிக்கு போதிய மரியாதை அளிக்கப்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பரஸ் கூறியுள்ளார். ராம்விலாஸ் பஸ்வானின் மறைவுக்கு பிறகு அவரது கட்சி 2ஆக பிரிந்தது. ஒரு அணிக்கு பஸ்வானின் மகன் தலைமை வகித்த நிலையில் மற்றொரு அணிக்கு பஸ்வானின் சகோதரர் பசுபதி பரஸ் தலைமை ஏற்றார். ஆனால் சிராக் பஸ்வானின் கட்சிக்கே தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் கூட பீகாரில் சிராக்கின் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. சிராக்கிற்கு மத்திய அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. இதனால் மனம் நொந்த பரஸ், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தற்போது கூட்டணியிலிருந்தே விலகியுள்ளார். பட்டியலினத்தவர் கட்சி என்பதால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும் பரஸ் கூறியுள்ளார். அதே நேரம் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணியில் சேரத்தயாராக இருப்பதாகவும் அவர் சூசமகாக குறிப்பிட்டுள்ளார். இன்னொரு புறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் மற்றொரு கட்சியான முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவம் மோர்ச்சாவும் அதிருப்தியில் உள்ளது. தங்களுக்கும் கூட்டணியில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என வெளிப்படையாக கூறியுள்ள மாஞ்சி, வரும் தேர்தலில் 35 முதல் 40 தொகுதிகளை கூட்டணியில் கேட்க திட்டமிட்டுள்ளார்.