மக்களவை
மக்களவை ட்விட்டர்
இந்தியா

ஒரே நாளில் 78: மக்களவையில் திமுக, காங். உள்ளிட்ட 33 பேர், மாநிலங்களவையில் 45 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Prakash J

மக்களவையில் அத்துமீறலில் ஈடுபட்ட இருவர்!

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, பிற்பகலின்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்த இருவர், வண்ணப் புகைக் குப்பிகளை வீசினர். எம்பிக்கள் சிலர், அவர்கள் இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அதற்குள் அவை காவலர்கள் விரைந்து வந்து அவர்களைப் பிடித்துச் சென்றனர். அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் வண்ணக்குப்பிகளை வீசி முழக்கங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இச்சம்பவம், நாடு முழுவதும் விமர்சனத்துக்குள்ளாகியது. மேலும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற டிச.13ஆம் தேதி அவை முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அமளியினால் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட்: 

இதைத் தொடர்ந்து டிச.14ஆம் தேதி மக்களவை கூடியதும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தார். அப்போது பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றுகோரி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்பிக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அமளில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினார். ஆனாலும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், மீண்டும் 2 மணிக்கு அவை கூடியது. அப்போதும், தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜோதிமணி உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் கனிமொழி உள்ளிட்ட திமுக எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறாகச் செயல்பட்ட அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மொத்தத்தில் டிசம்பர் 14ஆம் தேதி மட்டும் மொத்தம் தமிழக எம்.பிக்களான கனிமொழி, ஜோதிமணி உள்பட 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள், நடந்துவரும் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரேநாளில் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட்

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை இன்று (டிச.18) காலை தொடங்கியது முதலே திமுக எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். கடந்த வாரம் நாடாளுமன்ற அவைக்குள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை அளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்கள் கோஷங்களை எழுப்பியும், கைகளில் அட்டைகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். எனினும், தொடர்ந்து அவையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னரும் அமளி நிலவியதால் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும் அமளி தொடர்ந்து. இதன்காரணமாக, அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டார். இதில் 33 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதன்படி தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், சுமதி, தமிழச்சி தங்கபாண்டியன், நவாஸ்கனி, அண்ணாதுரை, கலாநிதி வீராசாமி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் காங்கிரஸ் எம்.பிக்களான விஜய் வசந்த், திருநாவுக்கரசர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர திரிணாமுல் காங்கிரஸ், ஜே.டி.யூ., ஆர்.எஸ்.பி., ஐ.யு.எம்.எல். உள்ளிட்ட எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

இதையும் படிக்க: 'நம் பூமியை காப்பாத்துங்க' மேடையில் திடீரென முழங்கிய மணிப்பூர் சிறுமி..COP28 மாநாட்டில் நடந்ததுஎன்ன?

அதேபோல், மாநிலங்களவையில் இன்று ஒரே நாளில் 45 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே திரிணாமூல் எம்பி டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதனால், மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல், மக்களவையில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 13 பேருடன் சேர்த்து மொத்தம் 46 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டையும் சேர்த்து 92 எம்பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். கிட்டதட்ட ஆறில் ஒரு பங்கு எம்பிக்கள் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.