உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, 3 நதிகள் சங்கமிக்கும் இந்த திரிவேணி சங்கமத்தில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், இம்மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு 51 லிட்டர் பசும்பாலை சீமா ஹைதர் என்ற பெண் நேர்த்திக்கடனாக வழங்க உள்ளார். சீமா ஹைதரும் அவரது கணவர் சச்சினும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், கர்ப்பமாக இருப்பதால் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு சீமாவால் செல்ல முடியவில்லை. ஆனாலும், மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு 51 லிட்டர் பசும்பாலை நேர்த்திக்கடனாக வழங்க உள்ளதாக சீமாவும் அவரது கணவர் சச்சினும் தெரிவித்துள்ளனர்.
மகா கும்பமேளாவிற்கு 51 லிட்டர் பசும்பாலை நேர்த்திக்கடனாக வழங்க இருக்கும் இந்த சீமா ஹைதர் யார் தெரியுமா? கடந்த 2023ஆம் ஆண்டு, ’எல்லை தாண்டிய காதல்’ என்ற செய்தி வாயிலாக எல்லா ஊடகங்களிலும் இடம்பிடித்தவர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோபாபாத் பகுதியைச் சேர்ந்த ஹைதருக்கு, திருமணமாகி குலாம் ஹைதர் என்ற கணவரும், 4 குழந்தைகளும் இருந்தனர். இதனிடையே, ஆன்லைன் விளையாட்டு மூலம் சீமா ஹைதருக்கு உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதைத் தொடர்ந்து மே 2023இல் தனது குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தார். பின்னர், சச்சினும் சீமாவும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்தனர். இந்த விவகாரம் இந்திய அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில் சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
அதேவேளை, தான் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என்றும், சச்சினை திருமணம் செய்துகொண்டு இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து, சீமா தனது 4 குழந்தைகளுடன் கணவர் சச்சினுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது சீமா கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.