சட்டவிரோதமாக நுழைந்தவர்களை கையில் விலங்கிட்டு, அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது அல்லது எல் சால்வடார் சிறைக்கு அனுப்பி வைக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் சட்டவிரோதமாக நுழைந்த 213 ஆப்கன் அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் 923 ஆப்கன் மக்கள் கைது செய்யப்பட்டு கோல்ரா மொர் பகுதியிலுள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
இதில், கடந்த மார்ச் 26 அன்று அகதிகள் முகாமிலிருந்து 22 கைதிகள் தப்பிச் சென்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 86 பேருடைய விசா காலாவதியானதாகவும், 116 பேர் ஆப்கன் குடியுரிமை அட்டை உரிமையாளர்கள் எனவும் 290 பேர் பதிவு செய்த சான்றுகள் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினரை நாடு கடத்த விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவானது வரும் மார்ச் 31 அன்று முடிவடையவுள்ள நிலையில், 213 ஆப்கான் அகதிகள் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசு பாகிஸ்தானின் இஸ்லாமபாத் மற்றும் ராவல்பிண்டியில் வாழ்ந்து வரும் ஆப்கன் நாட்டினர் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு முடிவதற்குள் ஆப்கன் நாட்டினரை வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பல்வேறு மனித நேயமற்ற முறைகளைக் கையாள்வதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.