பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் உள்ள மிர்பூர் மாத்தேலோவைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சாந்தி பாய் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஆசைப்பட்டு விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய - பாகிஸ்தான் உறவில் விரிசல் தொடர்வதை அடுத்து அவர்களுடைய விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனால், மனத் துயருற்ற அவர்கள் குறுக்கு வழியில், அதாவது சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முடிவெடுத்தனர். இத்தகைய முடிவை ரவிக்குமாரின் தந்தை கண்டித்துள்ளார். ஆனால் அதையும் மீறி அவர்கள் எல்லையைக் கடக்க முயன்றனர். இதற்கிடையே எல்லையைக் கடந்த அவர்கள், பிபியன் பாலைவனத்தில் திசைதிருப்பப்பட்டனர். பாலைவனத்தில் அவர்கள் பயணித்ததால் தாகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்களிடம் தண்ணீர் இல்லாததால், இறுதியில் நீரிழப்புக்கு ஆளாகி உயிரைத் துறந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து அவர்கள் கொண்டுவந்த வெற்று ஜெர்ரி கேனுடன் அவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது. அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அரசு அவர்களின் உடல்களை திருப்பி அனுப்பினால், ஜெய்சால்மரில் உள்ள உறவினர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். ஒருவேளை, உடல்கள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படாவிட்டால், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்குகளைச் செய்ய இங்குள்ள உறவினர்கள் தயாராக இருக்கின்றனர்” என இந்து - பாகிஸ்தான் இடம்பெயர்ந்த ஒன்றியம் மற்றும் எல்லை மக்கள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீப் சிங் சோதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர், “அவர்களுடைய உடல்களுடன் பாகிஸ்தானிய தேசிய அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளதாகவும், இந்த சம்பவம் எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவல் அல்லது பிற குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் எனவும், இதுதொடர்பாக காவல்துறை மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.