வாகா எல்லை pt
இந்தியா

வாகா எல்லையை திடீரென மூடிய பாகிஸ்தான்... சொந்த நாட்டு மக்களையே தவிக்கவிட்ட அவலம்!

கண்ணீரில் பாகிஸ்தானிய மக்கள்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியனர். அதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் அதிரடியான எதிரெதிர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

குறிப்பாக, பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது.

இந்தவகையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இரண்டு நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்தியா உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், குறுகிய கால அவகாசம் மட்டுமே இருந்ததால் அனைத்துப் பாகிஸ்தானியர்களாலும் வெளியேற முடியவில்லை. மருத்துவ தேவை, படிப்பு என பல தேவைகளுக்காக இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது நாடு திரும்பும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காரணத்தால், இந்தியா கால அவகாசத்தை நீட்டித்தது.

இப்படியான நேரத்தில், தங்கள் சொந்த நாட்டினரை பற்றியே கவலைக்கொள்ளாமல் அட்டாரி வாகா எல்லையை நேற்றைய தினம் திடீரென மூடியுள்ளது பாகிஸ்தான் . பாகிஸ்தான் திடீரென எல்லையை முழுவதுமாக முடியதால், தாயகம் செல்லமுடியாமல், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானிய மக்கள் தவித்து வருகின்றனர்.

எல்லை சீல் வைக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, 125 பாகிஸ்தான் நாட்டவர்கள் எல்லையைக் கடந்து சென்றுள்ளனர்.

எல்லையில், இருந்த பாகிஸ்தானிய குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், "தயவுசெய்து எல்லையைக் கடக்க அனுமதிக்கச் சொல்லுங்கள். நான் எங்கள் குழந்தைகளிடம் செல்ல வேண்டும். என்னுடைய குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள். பெற்றோரைக் குழந்தைகள் பிரிய வேண்டும் என எந்தச் சட்டம் சொல்கிறது. எனது குழந்தைகள் அங்கு அழுது கொண்டு இருக்கிறார்கள். நான் அங்கே செல்ல வேண்டும்" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.