அமிர்தரஸில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது தவறு என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். மேலும், ராணுவ நடவடிக்கை இந்திரா காந்தியின் உயிரையே பறித்துவிட்டது என்றும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
ஜூன் 1984 இல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இருந்து பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து பேசிய சிதம்பரம், அது இந்திரா காந்தியின் முடிவு மட்டுமல்ல என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் குஷ்வந்த் சிங் இலக்கியத் திருவிழாவில், பத்திரிகையாளர் ஹரிந்தர் பவேஜாவின் They Will Shoot You, Madam எனும் புத்தகம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடுவராகக் கலந்துகொண்டு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இங்கிருக்கும் எந்த அதிகாரிகளையும் அவமதிப்பதற்காகக் கூறவில்லை. அனைத்து பயங்கரவாதிகளையும் பிடிக்கவும் கைப்பற்றவும் வழி இருந்தது. ஆனால், ப்ளூஸ்டார் என்பது தவறான வழி. அந்த தவறுக்கு திருமதி காந்தி (இந்திரா) தன் உயிரைக் கொடுத்தார் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். அந்த தவறுக்கு இந்திரா காந்தியை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல. ராணுவம், காவல்துறை, உளவுத்துறை என அனைவரும் சேர்ந்துதான் இத்தகைய முடிவை எடுத்தனர். எனவே இந்திரா காந்தியை மட்டுமே பொறுப்பாக்கி இதில் குற்றம் சுமத்த முடியாது. மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு, ராணுவத்தை வெளியில் வைத்திருப்பதன் மூலம் பொற்கோவிலை மீட்டெடுத்ததற்கான சரியான வழியை நாங்கள் காட்டினோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலில் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததன் காரணமாக அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவதற்காகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காகவும் ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்று பெயர் வைக்கப்பட்டது. காலிஸ்தான் இயக்கத்தின் தலைவரான பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் ஆயுதங்களை பொற்கோவிலில் மறைத்துவைத்ததாக குற்றம்சுமத்தப்பட்டனர். தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொற்கோயில் சீக்கியர்களுக்கான புனிதமான கோயில்களில் புனிதமான கோயிலாகக் கருதப்படுகிறது. அங்கு ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிரவாதிகளைப் பிடிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக இந்திரா காந்தி கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ராணுவ நடவடிக்கை நடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, 31 அக்டோபர் 1984 அன்று இந்திரா காந்தி அவரது மெய்காவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த மெய்காவலர்கள் சீக்கியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.