பீகார் தேர்தலில் AIMIM கட்சி இஸ்லாமிய வாக்குகளைப் பிரித்து மகாகத்பந்தனுக்கு பின்னடைவு ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. சீமாஞ்சல் பகுதியில் இஸ்லாமிய வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓவைசி கட்சி இஸ்லாமிய உரிமைகளை பேசும் கட்சியாகவும், பாஜகவிற்கு ஆதரவான வாக்கு வெட்டும் கருவியாகவும் பார்க்கப்படுகிறது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. அக்கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மையையும் தாண்டி முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, இரவு 7 மணி நிலவரப்படி பாஜக 64 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 37 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது. பிற கூட்டணி கட்சியான சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 11 தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில்., 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 5 தொகுதியிலும் பிற கூட்டணி கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. ஜன சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாத நிலையில் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் தொகுதியின் நிலவரம் குறித்து அலச வேண்டியது அவசியமாகிறது. பூர்னியா, கடிஹார், கிஷன்கஞ்ச், அரரியா ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பிராந்தியம் சீமாஞ்சல். மொத்தம் 24 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாக இருக்கும் சீமாஞ்சல் பீகாரின் மிக அதிக போட்டி நிலவும் அரசியல் பகுதியாகவும் திகழ்கிறது. ஏனெனில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிக பலமாக இருக்கும் பகுதியாகவே சீமாஞ்சல் உள்ளது.
ஏனெனில்., ஆர்ஜேடிக்கு மிக முக்கியமான வாக்கு வங்கி என்பது முஸ்லீம் மற்றும் யாதவ சமூக மக்களுடைய வாக்குகள்தான். சீமாஞ்சல் பிராந்தியம் இஸ்லாமியர்கள் அதிகம் கொண்ட பகுதியாக இருக்கிறது. குறிப்பாக, கிஷன்கஞ்சில் 60% இஸ்லாமிய மக்களும், பூர்னியாவில் சுமார் 30% இஸ்லாமியர்களும் இருக்கின்றனர். இதனுடன், யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்களும், மிக பின்தங்கிய வகுப்பைச் (EBCs) சேர்ந்தவர்களும் அதிக அளவில் இருப்பதால், இந்த பகுதி பீகார் தேர்தல்களில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது.
இதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. சீமாஞ்சல் பிராந்தியத்தில் மொத்தம் 47% இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். மொத்தம் 24 தொகுதிகள் இருக்கும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் இஸ்லாமியர்கள்தான் அதிகம் இருக்கின்றனர். ஆனால், கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்று பிராந்தியத்தில் பெரும்பான்மையை வென்ற கூட்டணியாக உருவெடுத்தது. மகாகத்பந்தன் 7 தொகுதிகளிலும், அசாதுதீன் ஓவைசி கட்சி 5 இடங்களையும் வென்றது. கடந்த தேர்தலில் மகாகத்பந்தனுக்கு மிகப்பெரும் பின்னடைவக் கொடுத்த கட்சியாக அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி உருவெடுத்தது.
இத்தகைய சூழலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் குறித்து சில முக்கியமான உரையாடல்கள் நிகழ்ந்தன. ஆர்ஜேடி இஸ்லாமிய வாக்காளர்களை வாக்கு வங்கியா மட்டுமே பார்க்கிறது; அதுதான் தேர்தலில் எதிரொலிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. ஏறத்தாழ 18% மக்கள் தொகையைக் கொண்டவர்களாக இஸ்லாமிய சமூகம் இருந்த நிலையில், மாநிலத்திலோ அல்லது ஆர்ஜேடியிலோ எந்த ஒரு அதிகாரமிக்க பொறுப்பிலும் இஸ்லாமியர்கள் இல்லை. எனவே, இஸ்லாமியர்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் AIMIM கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிப்பது தவறில்லையே என்றனர். மறுமுனையில், AIMIM கட்சியை இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பேசும் கட்சியாக சிலர் பார்த்தனர்.
இன்னும் சிலரோ பாஜகவிற்கு ஆதரவான வாக்கு வெட்டும் கருவியாகவே பார்த்தனர். கடந்த தேர்தலில் நடந்தது போன்றே இந்த தேர்தலிலும் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஓவைசிக்கு கடந்த தேர்தல்களில் இருந்த பெரும்பான்மையான செல்வாக்கு இப்போது இல்லை என்ற பார்வையும் முன்வைக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும் தாண்டித்தான் மிகுந்த எதிர்பார்ப்போடு தேர்தல் நடைபெற்றது. முடிவுகள் என்னவோ கடந்த தேர்தலை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.
ஏறத்தாழ 24 தொகுதிகளில் 5 தொகுதிகளில் AIMIM கட்சி வெற்றி பெற்றுள்ளது. 9 தொகுதிகளில் பாஜக வெற்றிபெரும் நிலையில் இருக்கிறது. 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும்,. 2 தொகுதிகளில் லோக் ஜனசக்தி கட்சியும், 5 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முன்னிலையில் இருக்கின்றன. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஆர்ஜேடி முன்னிலையில் இருக்கிறது.
பீகாரில் கடந்த சில தேர்தல்களாகவே வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. கடந்த தேர்தலில்கூட ஆட்சி அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியாக அமர்ந்த மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது 12 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் AIMIM கட்சி தனிக்கூட்டணி அமைத்துக் களம் கண்டது ஆர்ஜேடிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அதேசமயம், AIMIM கட்சி மகாகத்பந்தனுடன் கூட்டணி அமைக்க ஆர்ஜேடியுடன் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கைகூடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வெறும் 6 தொகுதிகள் மட்டுமே ஓவைசி கேட்ட நிலையில் அதற்கு உடன்பாடு எட்டப்படவில்லை.
பீகாரில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க ஆரம்பித்த 2005 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின், இஸ்லாமிய மக்களது வாக்குகள், பாஜகவை எதிர்ப்பவர்களுக்கு மட்டுமே செல்லும் என்றானது. நிதிஷ் மீது இருக்கும் நன்மதிப்பின் காரணமாக, குறிப்பிட்ட அளவிலான இஸ்லாமிய சமூகத்தினர் நிதிஷ்க்கு வாக்களித்து வந்த நிலையில், நாட்கள் செல்லச்செல்ல அது ஆர்ஜேடிக்கு மட்டுமே சென்றது.
இத்தகைய சூழலில்தான், கடந்த சில தேர்தல்களாக அந்த வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதேசமயத்தில் இளைய மற்றும் நகர்புறத்தில் வாழும் இஸ்லாமிய சமூக மக்களுள் முஸ்லீம் அடையாளத்தை விட வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது ஜன் சுராஜ் கட்சிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்பட்டது. எப்படியிருந்தாலும் அது மகாகத்பந்தன் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.