supreme court pt desk
இந்தியா

10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது 8,630 புகார்கள்.. மக்களவையில் மத்திய அரசு தகவல்!

பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 8,630 புகார் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு வந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Premkumar S

கடந்த 10 ஆண்டுகளில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக 8,630 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புகார்கள் ஊழல், பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கடுமையான ஒழுங்கீனங்களை உள்ளடக்கியவை. 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அதிகபட்ச புகார்கள் வந்துள்ளன.

உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக, ஊழல், பாலியல் மற்றும் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் பதியப்பட்ட புகார்கள் குறித்து திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் மக்களைவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இன்று, மத்திய சட்ட மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

சட்டத்துறை அர்ஜுன் ராம் மேக்வால்

அதில், 2016 முதல் 2025 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல், பாலியல் அத்துமீறல்கள் அல்லது மற்ற கடுமையான ஒழுங்கீனங்கள் தொடர்பாக மொத்தம் 8,630 புகார்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக, 2024 ஆம் ஆண்டில் 1,170 புகார்கள் வந்துள்ளன எனவும், 2025 ஆம் ஆண்டில் 1,102 புகார்கள் வந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, எம்.பி மாதேஷ்வரன் இந்த வழக்குகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்தப் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அல்லது எத்தனை புகார்கள் மீதான விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளன? என்பது குறித்து சட்ட அமைச்சகம் தனது பதிலில் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும், நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான பதிவுகள் ஏன் இல்லை என்பதையும் சட்ட அமைச்சகம் விளக்கவில்லை.

அதேசமயம், நீதிபதிகளுக்கு எதிரான புகார்களைச் சேகரிக்க மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRAMS) தவிர வேறு ஏதேனும் வழிமுறை அரசிடம் உள்ளதா என்றும், அத்தகைய புகார்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட முன்மொழிகிறதா என்றும் மாதேஷ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, சட்டத்துறை அமைச்சர் மேக்வால், நீதிபதிகள் மீதான புகார்களைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மட்டுமே தகுதியுடையவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.