மும்பை | ”இந்தியாவுக்கு திரும்புங்கள்”.. விஜய் மல்லையாவுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை!
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி அளவில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனிற்கு தப்பியோடினார். இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு மல்லையாவை ’தப்பியோடிய பொருளாதார குற்றவாளி’ என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, லண்டனில் இருந்து கொண்டே “தப்பியோடிய பொருளாதார குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என விஜய் மல்லையா இந்தியாவில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தான் இன்று, இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் “நீங்கள் இந்தியாவிற்க்கு திரும்பி வர வேண்டும். நீங்கள் திரும்பி வரவில்லை என்றால், உங்கள் மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது. நீங்கள் நீதிமன்ற செயல்முறையைத் தவிர்க்கிறீர்கள். எனவே, நீங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை வேண்டுமென்றே தவிர்க்கும் அதே வேளையில் சமமான நிவாரணத்தைப் பெற முடியாது. இருப்பினும், நியாயமாக, நாங்கள் வழக்கைத் தள்ளுபடி செய்யவில்லை. மேலும் உங்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குகிறோம்" என்று கூறியுள்ளது.
மேலும், மல்லையா இந்தியா திரும்புவாரா? இல்லையா? என்பதை தெளிவாகக் கூறும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்த வழக்கு பிப்ரவரி 18 அன்று மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

