Pt Web கோப்பு படம்
இந்தியா

70% வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.. மத்திய அரசின் புதிய முடிவு.. பறிபோகும் ஆபத்து!

இந்தியாவில் 70 விழுக்காட்டுக்கு அதிகமான வாகனங்கள் உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி இயங்கி வருவது தெரியவந்துள்ளது. அதில், 17 கோடி வாகனங்களின் பதிவு ரத்தாகும் சூழல் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.

PT WEB

இந்தியாவில் 70 விழுக்காட்டுக்கு அதிகமான வாகனங்கள் உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி இயங்கி வருவது தெரியவந்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் 'வாகன்' (Vahan) தரவுத்தளத்தில் மொத்தம் 40.7 கோடி வாகனங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில், 30 கோடி வாகனங்கள்; அதாவது, 70 விழுக்காட்டுக்கும் அதிகமான வாகனங்கள், புகைச்சான்றிதழ், தகுதிச் சான்றிதழ், காப்பீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ அனைத்துமோ புதுப்பிக்கப்படாமல் உள்ளன. வெறும், 8.2 கோடி வாகனங்கள் மட்டுமே அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு உரிய முறையில் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் முறையாக இயங்கி வருகின்றன.

வாகன் தரவு தளம்

விதிமுறைகளை மீறும் வாகனங்களில் பெரும்பான்மையானவை இருசக்கர வாகனங்கள்தான். சுமார் 23.5 கோடி இருசக்கர வாகனங்கள் முறையான ஆவணங்களின்றிச் சாலைகளில் ஓடுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இயங்குகின்றன. தெலங்கானா மாநிலம் மட்டுமே 20 விழுக்காட்டிற்கும் குறைவான விதிமீறல்களுடன் சற்று மேம்பட்ட நிலையில் உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு வாகனத் தரவுத்தளத்தைச் சீரமைக்கத் தானியங்கி முறையை அறிமுகம் செய்கிறது. ஓராண்டு வரை ஆவணங்களைப் புதுப்பிக்காத வாகனங்கள் 'தற்காலிகமாக பயன்படுத்த முடியாத' நிலைக்கு மாற்றப்படும். இரண்டு ஆண்டுகள் கடந்தும் விதிகளைப் பின்பற்றாத வாகனங்களின் பதிவுத் தரவுத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு, அவை சட்டப்படி இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும்.