பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பீகாரில் நடத்தப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், 5 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தமாக உள்ள 7 கோடியே 90 லட்சம் வாக்காளர்களில் 35 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் முகவரிகளில் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 17 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தரமாக இடம் பெயர்ந்திருக்கலாம் என்றும், 12 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2003ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது இந்திய குடியுரிமை மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் தங்களுடைய அடையாள அட்டையாக காண்பிக்க மொத்தம் 11 ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. ஆனால் மிக முக்கியமாக ஆதார், ஏற்கெனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பீகாரில் வாக்காளர் திருத்தத்தின்போது ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.