தமிழ்நாட்டில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், தமிழக அரசு இங்குள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 நிதி உதவி வழங்கி வருகிறது. இத்திட்டம் பிற மாநிலத் தேர்தல் அறிக்கைகளிலும் தெரிவிக்கப்பட்டு, தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுகள் அதை அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவில் குறைந்த வருமானம் கொண்ட ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயதுடைய பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் லட்கி பஹின் திட்டம் தொடங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2.41 கோடி பெண்களுக்கு ஆதரவாக, ரூ.3,700 கோடியை அரசு வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டில், சுமார் 5 லட்சம் தகுதியற்ற பெண்கள் சலுகைகளைப் பெற்றதால் ரூ.1,640 கோடி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக துறையின் மதிப்பாய்வில் கண்டறியப்பட்டது. இதில் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், தகுதியான வயதுவரம்பை மீறிய மற்றவர்களும் அடங்குவர். கூடுதலாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது பயனாளிகளாகப் பெண்கள் பட்டியலிடப்பட்ட சுமார் 7.97 லட்சம் வழக்குகளும் கண்டறியப்பட்டன, இதன்மூலம் ரூ.1,196 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.
இந்த நிலையில், இத்திட்டம் குறித்து மாநில அரசு கடந்த ஜூன் மாதம் தணிக்கை செய்ததில் 14,298 ஆண்கள் முறைகேடாக ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், இத்தொகையை பெற்றதன் மூலம், அரசுக்கு 21.44 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஒரே குடும்பத்தில் இரு பெண்கள் நிதி பெற்றது உள்ளிட்ட முறைகேடுகளும் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஆண் பயனாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்றும் துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த மோசடிகள் காரணமாக 26.34 லட்சம் பயனாளிகளுக்கான தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் சரிபார்க்கப்படும் வரை அவர்களின் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விரிவான ஆய்வுக்குப் பிறகு தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு அவர்களின் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.