இந்தியக் கல்வித் துறையில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவும், 1 லட்சம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டுமே இயங்கும் அவலமும் வெளிப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வித் தட்டுப்பாட்டில் பெரும்பங்கு பிஹார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ளது. கல்வித் தகுதித் தேர்வில் 4 பேரில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெறும் நிலைமை கல்வித் தரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
இந்தியக் கல்வித் துறை சந்தித்துவரும் கடுமையான சவால்கள் குறித்த முக்கியத் தரவுகள் வெளியாகியுள்ளன. தேசியக் கல்விக் கொள்கையின் படி, இந்தியாவில் சுமார் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், 1 லட்சம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு மட்டுமே இயங்குகின்றன. ஆரம்பக் கல்வித் தட்டுப்பாட்டில் 90 சதவீதம் பிஹார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலேயே நிலவுகிறது.
கல்வித் தகுதித் தேர்வில் 4 பேரில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தனியார்ப் பள்ளி ஆசிரியர்களில் 50 சதவீதம் பேர் எழுத்துபூர்வமான ஒப்பந்தம் இன்றியே பணிபுரியும் சூழலே காணப்படுகிறது. மேலும், தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் சராசரியாக ரூ.20 ஆயிரம் மாத ஊதியம் பெறுகின்றனர். மறுபுறம், தனியார் பயிற்சி மையங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 45 சதவீத மாணவர்களும், கிராமப்புறங்களில் 33 சதவீத மாணவர்களும் தனியார் படிப்புகளை நாடுகின்றனர்.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனியார் பயிற்சித் துறையின் மதிப்பு சுமார் 650 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக இந்திய நகர்ப்புறக் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ10 ஆயிரம் தனியார் பயிற்சிக்குச் செலவிடுகின்றன. பள்ளிக் கல்வி மட்டும் போதாது என்ற எண்ணமே இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.