இந்தியா

விபத்துகளால் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

விபத்துகளால் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

webteam

தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாததால் தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் சாலை விபத்துகளினால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. அதில் 2017ஆம் ஆண்டில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக நாடு முழுவதும் தலைக்கவசம் அணியாததால் 98 பேரும், சீட் பெல்ட் அணியாததால் 79 பேர் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசியதால் விபத்தில் சிக்கி ஒரு நாளைக்கு சராசரியாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 2017ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 48 ஆயிரமாக உள்ளது. இதில் தலைக்கவசம் அணியாமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டும் 36 ஆயிரம். சீட்பெல்ட் அணியாததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8708 ஆக உள்ளது.

தமிழகத்தில் மட்டும் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5211ஆகவும், சீட்பெல்ட் அணியாததால் பலியானோர் எண்ணிக்கை 3497ஆகவும் உள்ளது. இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணித்த 42 சதவிகிதம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். பொதுவாக 67 சதவிகித சாலை விபத்தானது வாகனத்தை வேகமாக இயக்கியதாலேயே நிகழ்ந்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கியதால் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மட்டும் 4776 பேர் உயிரிழந்துள்ளனர்.