முக ஸ்டாலின் PT
இந்தியா

ஸ்டாலினை சமாதானப்படுத்த கடைசி முயற்சி? சென்னையில் மம்தா, ராகுல்!

மக்களவை தொகுதிகள் குறைப்பு: மத்திய அரசின் மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு!

PT WEB

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க சென்னைக்கு வருகிறார்கள். இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு முன் நடைபெறுகிறது.

செய்தியாளர் - M.மீரா

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் இன்று சென்னை வருகின்றனர்.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை, அரசியலமைப்புச் சட்டத்தின் 132-வது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான இரண்டாவது மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களுக்கு ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆ. ராசா

இதுகுறித்து பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, "காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களவையில் தமிழகத்தின் 7.18 சதவீத தொகுதிப் பங்கு குறைக்கப்படக் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. தற்போது அந்தப் பங்கு தொடர்கிறது. இருப்பினும், சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தேவைப்பட்டால் அதற்கான திருத்தங்களைக் கொண்டுவருவோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் சென்னைக்கு வருகின்றனர்.

நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவர உள்ள மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மிசா பாரதி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்தப் பயணத்தில் இடம்பெறுகின்றனர்.

Akilesh, Rahul , Kharge, Sonia Gandhi & Mamata

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.