ஷ்வரன் சிங் x
இந்தியா

OP Sindoor | சுற்றிலும் வெடித்த குண்டுகள்.. ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவன்..

இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ வீரர்களுக்கு சேவை செய்த 10 வயதான ஷ்ரவன் சிங்கிற்கு 'பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்' விருது வழங்கப்பட்டிருக்கிறது.

PT WEB

வீரம், கலை, சுற்றுச்சூழல், சமூக சேவை, அறிவியல் ஆகிய துறைகளில் 5 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளின் சாதனைகளுக்கு ”பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லி விக்யான் பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தாண்டுக்கான விருதுகளுக்கு 20 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதளித்தார்.

அதன்படி, இந்திய ராணுவத்தில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ வீரர்களுக்கு சேவை செய்ததற்காக 10 வயதான ஷ்ரவன் சிங்கின் துணிச்சல் மற்றும் வீரத்தை பாராட்டி ”பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

ஷ்வரன் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் சக் தரன் வாலி என்ற கிராமத்தை சார்ந்தவர் 10 வயதான ஷ்ரவன் சிங். இவர் இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படும் ஆபரேசன் சிந்தூரின்போது தன் கிராமத்துக்கு அருகே தங்கியிருந்த ராணுவ வீரர்களுக்கு தினமும் துணிச்சலுடன் நடந்தும், மிதி வண்டியிலும் தண்ணீர், பால், தேநீர், லஸ்ஸி மற்றும் ஐஸ் எடுத்துச் சென்று கொடுத்து வந்தார். இதன்மூலம், அதிக ஆபத்தான சூழ்நிலையிலும் ராணுவ வீரர்களுக்கு சேவை செய்த ஷ்ரவன் பெரிதும் பாராட்டப்பட்டார்.

தொடர்ந்து, ஷ்ரவன் சிங்கை அழைத்துப் பாராட்டியிருந்த இந்திய ராணுவம் “இளைய சிவில் வீரன்” என்றும் அங்கீகரித்திருந்தது. இந்த நிலையில்தான், நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் ஷ்ரவன், ”பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்திருக்கிறார்.

ஷ்வரன் சிங்

விருதினை பெற்ற பிறகு ஷ்ரவன் சிங் பேசும் போது, “ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ வீரர்கள் எங்களது கிராமத்திற்கு வந்தார்கள். அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன். அவர்களுக்கு தினமும், பால், லஸ்ஸி, மோர், தேநீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போய் கொடுத்தேன். இதற்காக எனக்கு விருதளித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த விழாவில் கோவை அருகே மின்சாரம் தாக்கிய சிறுவனை காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த வியோமா பிரியா-க்கு பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த விருதினை அவரது தாயார் அர்ச்சனா பெற்றுக் கொண்டார்.