கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நடத்தியது.
இதில், இந்திய ராணுவத்தினர் உயிர்பலிகளையும், தியாகத்தையும் யாராலும் மறக்கமுடியாது. இந்தவகையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மத்திய பிரதேச துணை முதலமைச்சர் ஜகதீஷ் தேவ்தா ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும் பிரதமர் மோடியின் காலடியில் விழுந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
"நாம் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும், ராணுவ வீரர்களும் பிரதமரின் காலடியில் விழுந்தனர். ஒட்டுமொத்த தேச மக்களும் பிரதமரின் காலடியில் கிடந்தனர்" என்று ஜகதீஷ் தேவ்தா பேசியதாக தெரிகிறது.
அவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர், ஜகதீஷ் தேவ்தா-வை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தான் தெரிவித்த கருத்து ஜகதீஷ் தேவ்தா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: “ எனது பேச்சை காங்கிரஸ் கட்சி திரித்து, தவறான வழியில் வெளியிடுகிறது. எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நமது ராணுவம் மிகப்பெரிய சேவையை ஆற்றியதாகத்தான் நான் கூறினேன். ராணுவத்தை இந்திய மக்கள் பணிந்து வணங்கியதாகவும் குறிப்பிட்டேன். எனது கருத்தை திருத்து வெளியிட்ட காங்கிரஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .” என்று ஜகதீஷ் தேவ்தா தெரிவித்துள்ளார்.